search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இமாச்சலுக்கு சுற்றுலா சென்ற திருச்சி பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்
    X

    இமாச்சலுக்கு சுற்றுலா சென்ற திருச்சி பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்

    இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சில மாவட்டங்கள் சேதம் அடைந்துள்ள நிலையில் சுற்றுலா சென்ற திருச்சி பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக பெற்றோர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தனர். #HimachalFloods #HimachalRains
    திருச்சி:

    இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இமாச்சல பிரதேசத்தில் ஹாங்ரா, குலு, சம்பா, மண்டி மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    சம்பா மாவட்டத்தில் ராவி என்ற நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. கடுமையான நிலச்சரிவு பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவுகளில் வீடுகள் இடிந்து விழுவதும், மழை வெள்ளத்தில் வீடுகள், லாரி, கார் வாகனங்கள், பொருட்கள் இழுத்துச் செல்லப்பட்டன.

    இதுவரை வெள்ளத்தில் சிக்கி சிறுமி உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் இந்த வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இமாச்சல பிரதேசத்துக்கு குலுமணாலி உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்பச் சுற்றுலா சென்ற திருச்சி காட்டூர் மான்போர்ட் பள்ளி மாணவ, மாணவிகள் திடீர் நிலச்சரிவு, மழை வெள்ளத்தால் மணாலியில் சிக்கித் தவித்து வருகிறார்கள்.

    கடந்த 20-ந்தேதி திருச்சியில் இருந்து டெல்லி வழியாக இமாச்சல பிரதேசம் குலுமணாலிக்கு 21-ந்தேதி சென்றனர். 5 நாட்கள் அங்கு பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு வருகிற 27-ந்தேதி சொந்த ஊருக்கு திரும்புவதாக இருந்தனர்.

    இதில் 22 பேர் மாணவர்கள், 9 பேர் மாணவிகள் என மொத்தம் 31 மாணவ, மாணவிகள் இதில் இடம் பெற்றிருந்தனர். அனைவரும் 8 முதல் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் ஆவர். இவர்களை பள்ளி முதல்வர், துணை முதல்வர் மற்றும் 9 ஆசிரிய, ஆசிரியைகள் அழைத்து சென்றிருந்தனர்.

    நேற்று நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் திருச்சி மாணவ, மாணவிகள் எங்கும் செல்ல முடியாமல் தவித்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலாவை ரத்து செய்துவிட்டு அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.

    சுற்றுலா சென்ற இடத்தில் மாணவ, மாணவிகள் சிக்கி கொண்டதால் திருச்சியிலுள்ள அவர்களது பெற்றோர்கள் கவலையடைந்தனர். அவர்கள் நிலை என்ன ஆனாதோ என அறிய முடியாமல் தவித்தனர்.

    இது குறித்து கலெக்டர் ராசாமணி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர். மாணவ, மாணவிகளை அழைத்து சென்ற பள்ளி முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை தொடர்பு கொண்டனர்.

    அவர்கள் குலுமணாலியில் ஒரு விடுதியில் அனைவரும் பத்திரமாக தங்கியிருப்பதாகவும், உணவு உள்ளிட்ட எந்த பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர், இயல்பு நிலை திரும்பியதும் ஊருக்கு திரும்புவதாக தெரிவித்தனர்.

    தொடர்ந்து மாணவ, மாணவிகள் குலுமணாலியில் இருந்து திருச்சியிலுள்ள தங்களது பெற்றோர்களிடம் போனில் பேசினர். நிலைமைகளை விளக்கினர். இதை தொடர்ந்து பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்.

    இதற்கிடையே சுற்றுலா சென்ற இடத்தில் குலுமணாலியில் சிக்கிக் கொண்ட மாணவ, மாணவிகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மூலம் சென்னையில் உள்ள கல்வித்துறை செயலாளர் மற்றும் அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் தெரிவித்தார். அவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவும், மீட்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராசாமணி தெரிவித்தார். #HimachalFloods #HimachalRains
    Next Story
    ×