search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் கலப்பு திருமணம் செய்த வாலிபரை கொன்ற 3 பேர் சிக்கினர்
    X

    நாகர்கோவிலில் கலப்பு திருமணம் செய்த வாலிபரை கொன்ற 3 பேர் சிக்கினர்

    கலப்பு திருமணம் செய்த வாலிபரை கொன்ற 3 பேர் சிக்கியுள்ளதால் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கீழசரக்கல் விளை ரகுமத்கார்டனைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 32). மீனவர். கலப்பு திருமணம் செய்தவர் இவரது மனைவி சகானா. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 

    செல்வம் நேற்றுமுன் தினம் இரவு கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். பொருட்கள் வாங்கி விட்டு வீட்டு அருகே வந்தபோது 4 பேர் கும்பல் அவரை வழிமறித்தது. 

    அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த அந்த கும்பல் செல்வத்தை சரமாரியாக தாக்கினர். இதில் செல்வத்தின் கழுத்து, மார்பு என உடலின் பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து உயிருக்கு போராடினார். அவரை வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. 

    கடைக்கு சென்ற செல்வம் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி சகானா, கணவரை தேடி வெளியே வந்தார். அப்போது செல்வம் ரோட்டில் அரிவாள் வெட்டுப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதை பார்த்து  அதிர்ச்சி அடைந்தார். அவர் சத்தம் போட்டு கதறிஅழுதார். அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து செல்வத்தை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே செல்வம் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன் விரோதம் காரணமாக செல்வம் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. செல்வத்தின் நண்பரான ஆஸ்டின் என்பவரை இளங்கடையைச் சேர்ந்த மனோ என்ற உஸ்மான் (30)  தாக்கியுள்ளார். இதையறிந்த செல்வம் உஸ்மானை சந்தித்து அவரை கண்டித்தார். அப்போது ஆத்திரத்தில் உஸ்மானை செல்வமும், ஆஸ்டினும் சேர்ந்து தாக்கினர். இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் செல்வத்தை கொலை செய்ய உஸ்மான் திட்டம் தீட்டினார். இதற்காக தனது நண்பர்களான கீழசரக்கல்விளையைச் சேர்ந்த பிரதீப், பிரபு மற்றும் புத்தன்குடியிருப்பைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோரின் உதவியை நாடினார். அவர்கள் உஸ்மானுக்கு உதவ சம்மதித்தனர்.  அவர்கள் திட்டப்படி நேற்று முன்தினம் இரவு செல்வத்தை அவரது வீட்டு அருகிலேயே வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. 

    இதையடுத்து உஸ்மான், பிரதீப், பிரபு, ரமேஷ் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். செல்வம் கொலைக்கு முன்விரோதம் மட்டும் தான் காரணமா? வேறு எதாவது காரணம் உண்டா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலையில் 4 பேரை தவிர மேலும் யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான உஸ்மான் ரவுடிகள் பட்டியலில் உள்ளார்.
    Next Story
    ×