search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருகிய பயிரை கண்டு மனமுடைந்த நாகை விவசாயி தற்கொலை
    X

    கருகிய பயிரை கண்டு மனமுடைந்த நாகை விவசாயி தற்கொலை

    கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராமல் பயிர்கள் கருகியதால் நாகை விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் நாகை மாவட்ட விவசாயிகளை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    நாகப்பட்டினம்:

    கர்நாடக மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    பின்னர் அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் இன்று வரை தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடைமடை வரை செல்லவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே விவசாயிகள் மறியல், ஆர்ப்பாட்டம் என நடத்தி வருகின்றனர்.

    கடைமடை பகுதியில் உள்ள வாய்க்கால், ஏரி- குளங்களை தூர் வாராததால் சம்பா பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. காவிரியில் வெள்ளம் வந்தும் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. வறட்சி காலத்தை போல பம்புசெட் மூலம் தான் சம்பா சாகுபடி செய்ய வேண்டியது உள்ளது என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியில் பிடியில் சிக்கிய விவசாயிகள் தற்கொலை செய்த சம்பவம் டெல்டா மாவட்டங்களில் அதிகமாக நடந்தது.

    தற்போது மேட்டூர் அணை 4 முறை நிரம்பியும் நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயி ஒருவர் தற்கொலை செய்தது விவசாயிகளிடையே மீண்டும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    நாகை மாவட்டம் கீழையூர் அருகே தலையாமழை பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது48). விவசாயியான இவர் குத்தகைக்கு நிலம் எடுத்து நெல் சாகுபடி செய்து வந்தார்.

    இந்தநிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான தலையாமழை பகுதிக்கு வந்து சேரவில்லை. இதனால் நெற்பயிர்கள் கருகின. இந்தநிலையில் கருகிய நெற்பயிர்களை கண்டு மனமுடைந்த ராமமூர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன் வி‌ஷத்தை குடித்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி இறந்தார்.

    கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராமல் பயிர்கள் கருகியதால் நாகை விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் நாகை மாவட்ட விவசாயிகளை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    தற்கொலை செய்த ராமமூர்த்திக்கு, ரேவதி என்ற மனைவியும் கருணாகரன், கதிர்வேல் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
    Next Story
    ×