search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி அருகே சாலையோரம் கவிழ்ந்த டேங்கர் லாரி
    X

    உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி அருகே சாலையோரம் கவிழ்ந்த டேங்கர் லாரி

    உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி அருகே இன்று சாலையோரம் கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல்-டீசலை பொதுமக்கள் கேன்களில் பிடித்து சென்றனர்.
    உளுந்தூர்பேட்டை:

    சென்னை மணலியில் இருந்து 24 ஆயிரம் லிட்டர் பெட்ரோல், டீசலுடன் டேங்கர் லாரி ஒன்று மதுரை நோக்கி புறப்பட்டது.

    இந்த லாரியை கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த காளியப்பன் (வயது 29) ஓட்டி வந்தார். அவருடன் கீளினர் ஒருவரும் லாரியில் வந்தார்.

    அந்த டேங்கர் லாரி இன்று காலை 5 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகில் உள்ள செங்குறிச்சி சுங்கசாவடி அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவர் காளியப்பனின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி திடீரென்று தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் லாரியின் இடுபாட்டுக்குள் சிக்கி டிரைவர் காளியப்பன், லாரி கிளீனர் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர்.

    தலைக்குப்புற கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல், டீசல் வெளியேறி அங்கிருந்த ஓடையில் ஆறு போல் ஓடியது.

    இந்த தகவல் செங்குறிச்சி பகுதியில் காட்டு தீ போல பரவியது. உடனே அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர்.

    டேங்கர் லாரியில் வெளியேறிய பெட்ரோல், டீசலை போட்டி போட்டு அவர்கள் கொண்டு வந்திருந்த பாத்திரங்கள் மற்றும் கேன்களில் பிடித்து சென்றனர்.

    இந்த விபத்து குறித்து உளுந்தூர் பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் லாரியில் டீசல், பெட்ரோல் பிடித்து கொண்டிருந்த பொது மக்கள் அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    இடிபாடுக்குள் சிக்கி காயம் அடைந்த லாரி டிரைவர் காளியப்பன் மற்றும் கிளீனரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனா ராணி தலைமையிலான தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    விபத்துக்குள்ளான டேங்கர் லாரியிலிருந்து பெட்ரோல், டீசல் வெளியேறுவதை தடுத்து நிறுத்தினர். கவிழ்ந்து கிடந்த லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கும் பணியில் தீயணைப்பு படையினரும், போலீசாரும் ஈடுபட்டனர்.

    பெட்ரோல், டீசல் கீழே கொட்டி கிடந்ததால் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.
    Next Story
    ×