search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைக்குள் புகுந்து பேன்சி ஸ்டோர் உரிமையாளரை தாக்கிய தி.மு.க.வினர்.
    X
    கடைக்குள் புகுந்து பேன்சி ஸ்டோர் உரிமையாளரை தாக்கிய தி.மு.க.வினர்.

    திருவண்ணாமலை அருகே கடைக்குள் புகுந்து பேன்சி ஸ்டோர் உரிமையாளரை தாக்கிய தி.மு.க.வினர்

    திருவண்ணாமலை அருகே பேன்சி ஸ்டோர் உரிமையாளரை செருப்பால் அடித்த தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தண்டராம்பட்டு:

    சென்னை விருகம்பாக்கம் பிரியாணி கடையில் கடந்த ஜூலை 28-ந் தேதி இரவு தி.மு.க. பிரமுகர் யுவராஜ் தனது ஆதரவாளர்களுடன் பிரியாணி வாங்க சென்றார். பிரியாணி தீர்ந்துவிட்டதாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

    அப்போது, தி.மு.க. பிரமுகர் யுவராஜ் ஆத்திரம் அடைந்து குத்துச்சண்டை வீரர் போல் ஊழியர்களின் முகத்தில் குத்திய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

    கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக யுவராஜ் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இதன் பரபரப்பு அடங்குவதற்குள் திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடியில் செல்போன் கடைக்குள் புகுந்து தி.மு.க. பிரமுகர்கள் ஊழியர்களை சரமாரியாக தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

    தாக்குதல் நடத்திய தண்டராம்பட்டு தி.மு.க. மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரகுபதி (29) மற்றும் அவருடைய நண்பர் கைது செய்யப்பட்டனர். தி.மு.க.வில் இருந்து ரகுபதி நீக்கப்பட்டார்.

    இந்த நிலையில் திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடியில் பேன்சி ஸ்டோர் கடைக்குள் புகுந்து உரிமையாளரை தி.மு.க.வினர் செருப்பால் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    சேலம்-தானிப்பாடி சாலையில் பேன்சி ஸ்டோர் வைத்திருக்கும் ராஜேஷ் என்பவர், அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்கள் பூபாலன், பவுன்குமார் ஆகிய 2 பேரிடமும் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.

    பணம் தர தாமதமானதால் ஆத்திரமடைந்த தி.மு.க. பிரமுகர்கள் 2 பேரும், பேன்சி ஸ்டோருக்குள் புகுந்து ராஜேஷை ஆபாசமாக பேசி செருப்பால் தாக்கினர். இந்த காட்சிகள் கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன.

    செருப்பால் அடித்ததால் மனமுடைந்த பேன்சி ஸ்டோர் உரிமையாளர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து, தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து தி.மு.க. பிரமுகர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இந்த தாக்குதல் வீடியோ காட்சிகள் பிரியாணி கடை பாக்சிங், செல்போன் கடை தகராறுகளை போல் பூதாகரமாகி வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    Next Story
    ×