search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் முகப்புத் தோற்றம்.
    X
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் முகப்புத் தோற்றம்.

    நாகர்கோவிலில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பு

    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி மைதானத்தில் நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
    நாகர்கோவில்:

    தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி குமரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாளை (22-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

    விழாவில் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். மேலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி பேசுகிறார்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி குமரி மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் அலங்கார வளைவுகளும், கொடி தோரணங்களுமாக காட்சி அளிக்கின்றன.

    விழா நடைபெறும் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. பந்தலின் முன்பகுதியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. விழா பந்தலின் முகப்பு பகுதியும் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை குமரி மாவட்டம் வருகிறார். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வரும் அவர் பின்னர் அங்கிருந்து காரில் நாகர்கோவில் வருகிறார்.

    வரும் வழியில் அவருக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். இரவில் நாகர்கோவில் சுற்றுலா மாளிகையில் தங்கும் எடப்பாடி பழனிசாமி, நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார்.

    முன்னதாக நேற்று அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நாகர்கோவில் வந்து விழா மைதானத்தை பார்வையிட்டு ஏற்பாடுகளை துரிதப்படுத்தினர்.

    விழாவையொட்டி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். குமரி மாவட்டம் மட்டுமல்லாது நெல்லை, தூத்துக்குடி, மதுரையில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், டி.ஐ.ஜி கபில்குமார் சரத்கார் ஆகியோர் நாகர்கோவிலில் முகாமிட்டு பாதுகாப்பு பணியை கவனித்து வருகிறார்கள்.

    நூற்றாண்டு விழா நடைபெறும் மைதானத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    குமரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. பள்ளிகளில் நாளை நடைபெற இருந்த காலாண்டு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு அக்டோபர் மாதம் 3-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல நாகர்கோவில் நகர் முழுவதும் நாளை போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு உள்ளது. #MGRCenturyFestival
    Next Story
    ×