search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரன் கட்சி பிரமுகர், செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்
    X

    தினகரன் கட்சி பிரமுகர், செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க கோரி தினகரன் கட்சி பிரமுகர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சென்னை:

    ராஜா அண்ணாமலைபுரம் ஆர்.கே.மடம் சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது.

    இன்று காலை இந்த செல்போன் கோபுரத்தில் வாலிபர் ஒருவர் ஏறினார். அவருடைய கையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடி இருந்தது.

    இதை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்து கூடி விட்டனர். கீழே இறங்கும்படி அவர்கள் குரல் கொடுத்தனர். ஆனால் அதை கண்டு கொள்ளாத அவர் செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்றார். கொடியை அசைத்து கோ‌ஷமிட்டார்.

    தகவல் அறிந்ததும் அபிராமபுரம் போலீசார் அங்கு வந்தனர். கீழே இறங்கும்படி வாலிபருக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர், “எனது கோரிக்கை நிறைவேற்றினால்தான் கீழே இறங்குவேன்” என்றார்.

    கோரிக்கை என்ன என்று கேட்டபோது “18 எம்.எல். எ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பை விரைவில் வெளியிட வேண்டும். அதுபற்றி உறுதி அளித்தால்தான் கீழே இறங்குவேன். இல்லை என்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன்” என்றார்.

    போலீசாரும், அங்கு கூடியிருந்தவர்களும் கோபுரம் உச்சியில் இருந்த வாலிபரை சமாதானப்படுத்தினார்கள். என்றாலும் கீழே இறங்க மறுத்துவிட்டார். 45 நிமிட போராட்டத்துக்கு பிறகு ஓரளவு சமாதானம் அடைந்த அவர் செலபோன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினார்.

    போலீசார் நடத்திய விசாரணையில், கோபுரத்தில் ஏறிய வாலிபர் பெயர் ராஜேஷ். ராயபுரத்தை சேர்ந்தவர். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகரான இவர், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளர் என்பது தெரியவந்தது.

    இதுபற்றி கூறிய அவர், “18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு தாமதமாகிக் கொண்டே போகிறது. அதனால்தான் அ.தி.மு.க. அரசு நீடிக்கிறது. தீர்ப்பு வந்து விட்டால் தமிழக அரசியலில் திருப்பம் வரும். எனவேதான் இந்த கோரிக்கையை வற்புறுத்தும் வகையில் கோபுரத்தில் ஏறினேன்” என்றார்.

    இதற்கு யாராவது தூண்டுதலாக இருந்தார்களா? என்பது குறித்து வாலிபர் ராஜேசிடம் விசாரணை நடந்து வருகிறது.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராடிய சம்பவம் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #
    Next Story
    ×