search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவிகளிடம் சில்மி‌ஷம் செய்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு
    X

    மாணவிகளிடம் சில்மி‌ஷம் செய்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டு கோணம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 35 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    பள்ளியின் தலைமை ஆசிரியராக பாபு (வயது51) என்பவர் இருந்து வருகிறார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மாணவ, மாணவிகளை தகாத வார்த்தைகளால் திட்டியும் அடித்தும் வந்துள்ளதாகவும் 1077 என்ற அவசர எண்ணுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில், முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி, மாவட்ட கல்வி அதிகாரியான குழந்தைவேலுவை விசாரிக்க உத்தரவிட்டார்.

    நேற்று பாப்பி ரெட்டிப்பட்டி வட்டார கல்வி அதிகாரி, உமாதேவி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பள்ளிக்கு சென்று அங்கு படிக்கும் 35 மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களிடமும், மாணவிகளின் பெற்றோரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் தலைமை ஆசிரியர் பாபு (வயது51) மாணவிகள் சிலரிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    மேலும் அவர் வகுப்பறையில் புகையிலை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவ, மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினார்கள்.

    அதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய குழுவினர் முதன்மை கல்வி அதிகாரி ராமசாமியிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் பாபுவை சஸ்பெண்ட் செய்ய அவர் உத்தரவிட்டார்.

    இது பற்றி முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி கூறியதாவது:-

    எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியரின் நடவடிக்கை குறித்து மாணவிகளிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது. இதில் பாலியல் தொல்லையில் அவர் ஈடுபட்டது உண்மையென தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். இன்று அதற்கான கடிதம் தலைமை ஆசிரியர் பாபுவிடம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×