search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் பேசியபோது எடுத்த படம்.
    X
    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் பேசியபோது எடுத்த படம்.

    ஜெயலலிதாவின் வாரிசாக அடையாளம் காட்டப்பட்டவர் தினகரன்- முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் பேச்சு

    ஜெயலலிதாவின் வாரிசாக அன்றைக்கே அடையாளம் காட்டப்பட்டவர் தினகரன் என்று ராசிபுரத்தில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் பேசினார். #TTVDhinakaran
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் பேசும் போது கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைவரையும் தம்பி என்று அழைத்தாலும், எம்.ஜி.ஆர். ஒருவரை மட்டும் தான் இதயக்கனி என அண்ணா அழைத்தார். முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் இதயத்தில் இடம் பெற்ற தலைவராக விளங்கியவர் டி.டி.வி. தினகரன்.

    1987-ம் ஆண்டு எம். ஜி. ஆர். மறைந்தபோது, இறுதி ஊர்வலத்தில் ராணுவ வண்டியில் இருந்து ஜெயலலிதாவை சிலர் தூக்கி எரிந்தபோது, அவர் கீழே விழாமல் தாங்கி பிடித்தது டி.டி.வி. தினகரனின் கரம் தான். அந்த தாயை பத்திரமாக மீட்டு போயஸ் தோட்டத்தில் விட்டவர் தான் டி.டி.வி தினகரன்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது நம்பிக்கை நட்சத்திரமாக கருதியதும் டி.டி.வியை தான். அவருக்கு அம்மா பேரவை செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைப்பு செயலாளர், கழக பொருளாளர் என பல்வேறு பதவிகளை மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். அன்றைக்கே அவரது வாரிசாக ஜெயலலிதாவாலேயே அடையாளம் காட்டப்பட்டவர் தான் டி.டி.வி. தினகரன்.

    தமிழ்நாடு ஒரு காலத்தில் வளம் நிறைந்த மாநிலமாக, சொர்க்க பூமியாக இருந்தது. தற்போது அனைத்து மாவட்டமும் அழிக்கப்பட்டு வருகிறது. விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது ஜெயலலிதாவின் ஆட்சி என கூறுகிறார். ஜெயலலிதா எதிர்த்த அனைத்து திட்டங்களையும் பிரதமர் மோடிக்கு பயந்து தமிழகத்தில் அவிழ்த்துவிட்டு உள்ளீர்களே இது ஜெயலலிதா ஆட்சியா?. உதய் மின் திட்டம், ஜி.எஸ்.டி, உணவு பாதுகாப்பு திட்டம், நீட் தேர்வு என ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை கொண்டு வந்துள்ளீர்களே இது ஜெயலலிதா ஆட்சியா?

    உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் அமைச்சர் காமராஜ் அரசாணையை சும்மா வெளியிட்டதாக கூறுகிறார். மேலும் நீட் தேர்வால் ஏழை மாணவி அனிதா மன வேதனையில் இறந்தார். ஊழல் ஆட்சி நடத்தும் நீங்கள் இதை ஜெயலலிதாவின் ஆட்சி என சொல்லாதீர்கள். தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர டி.டி.வி.தினகரனை முதல்- அமைச்சராக ஆக்குவதற்கு உறுதுணையாக இருங்கள்.

    இவ்வாறு முன்னாள் அமைச்சர் கூறினார். #TTVDhinakaran
    Next Story
    ×