search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர்
    X

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர்

    இளம்பெண்ணுக்கு வீட்டிலேயே நடைபெற்ற பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் ஆலோசனைக்கு பிறகு தாயும், மகளும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் குறிச்சி நகரைச் சேர்ந்தவர் முகமது தாஜுதீன் (வயது 29). இவரது மனைவி அன்சுல் பாத்திமா (24). இவர்கள் தற்போது விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள நம்பிபட்டி கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருகின்றனர்.

    முதல் முறையாக கர்ப்பமான அன்சுல் பாத்திமாவுக்கு ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை அளிக்க முகமது தாஜுதீன் திட்டமிட்டுள்ளார்.

    ஒருமுறை தடுப்பூசி போட மட்டும் ஆஸ்பத்திரிக்கு சென்ற அன்சுல் பாத்திமா, அதன் பிறகு முறையான சிகிச்சை எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை.

    இந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார் முகமது தாஜுதீன். அன்சுல் பாத்திமாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இதற்கிடையே வீட்டிலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்ட செய்தி கிடைத்து, கோட்டையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினர் அங்கு விரைந்தனர். குழந்தையின் தொப்புள் கொடியை அகற்ற வேண்டும் என அவர்கள் கூறியபோது, 3 நாட்களுக்கு அகற்றக்கூடாது என முகமது தாஜுதீன் வாக்குவாதம் செய்தார்.

    இதற்கிடையே அன்சுல் பாத்திமா உடல்நலத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே தாயையும், குழந்தையையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும் என ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அறிவுறுத்தினார். ஆனால் அதனையும் ஏற்க முகமது தாஜுதீன் மறுத்து விட்டார்.

    இது குறித்து வத்திராயிருப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து முகமது தாஜுதீனை எச்சரித் தனர். அதன் பிறகு அன்சுல் பாத்திமாவும் குழந்தையும் ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    Next Story
    ×