search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க.-அ.தி.மு.க. ஆட்சிகளை வீழ்த்த தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைப்போம் - ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம்
    X

    பா.ஜ.க.-அ.தி.மு.க. ஆட்சிகளை வீழ்த்த தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைப்போம் - ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம்

    பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. ஆட்சிகளை வீழ்த்த தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைப்போம் என்று ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. #MDMK #DMK

    ஈரோடு:

    ஈரோடு அருகே மூலக்கரையில் ம.தி.மு.க. சார்பில் பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா, ம.தி.மு.க. வெள்ளிவிழா, வைகோவின் பொதுவாழ்வு பொன் விழா ஆகிய முப்பெருவிழா மாநில மாநாடு இன்று நடந்தது.

    இன்று காலை 8.30 மணிக்கு மாநாடு நடைபெறும் மூலக்கரைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வந்தார். மாநாட்டு திடலில் ம.தி.மு.க. கொடியை துணை பொதுச்செயலாளர் துரை பாலகிருஷ்ணன் ஏற்றினார்.

    அதை தொடர்ந்து தொண்டர் அணி, ஆபத்து உதவிகள் அணியினரின் அணிவகுப்பு நடந்தது. மாநாட்டு பந்தலை பொருளாளர் கணேசமூர்த்தி திறந்து வைத்தார்.

    பெரியார் சுடரை புலவர் சே. செவந்தியப்பன், அண்ணா சுடரை துணை பொதுச் செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி ஆகியோர் ஏற்றி வைத்தனர். பெரியார் சிலைக்கு அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி மாலை அணிவித்தார். அண்ணா சிலைக்கு வைகோ மாலை அணிவித்தார்.

    வைகோ பொது வாழ்வு பொன்விழா புகைப்பட கண்காட்சியை டாக்டர் ரொஹையா ஆகியோர் திறந்து வைத்தார்.

    மாநாட்டுக்கு ம.தி.மு.க. மாநில தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். மல்லை சத்யா வரவேற்று பேசினார். தொடர்ந்து காலை அமர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.மதியம் கருணாநிதி உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. வைகோ பொது வாழ்வு பொன் விழா மலரை தேசிய மாநாட்டுக்கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லா வெளியிட்டார். பாராட்டு கேடயத்தை திரா விடர் கழக தலைவர் கி. வீரமணி வழங்கினார்.

    மாநாட்டில் 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநாட்டு பந்தலில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

     


    மக்கள் ஆட்சி தத்துவத்தை மத்திய பா.ஜனதா அரசு கேள்விக் குறியாக்கி வருகிறது. அதன் கைப்பாவையாக மாநில அ.தி.மு.க. அரசு இயங்கி வருகிறது. இந்த இரண்டு அரசுகளையும் வீழ்த்த தி.மு.க. தலைமையில் தோழமை கட்சிகளுடன் ம.தி.மு.க. அணி சேர்ந்து கடமையாற்றும்.

    மத்திய அரசு பள்ளிகளில் பிற்பட்டோருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

    காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணைகள் கட்ட மத்திய அரசு அனுமதிக்க கூடாது.

    * முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சட்டரீதியான உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

    * காவிரி பாசன பகுதிகளில் மீத்தேன், ஹெட்ரோகார்பன், பெட்ரோலிய பொருள் எடுக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்.

    * ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைத்தால் போராட்டம் வெடிக்கும்.

    * 8 வழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும். சென்னை- சேலம் இடையே ஏற்கனவே உள்ள 3 சாலைகளை விரிவுபடுத்த வேண்டும்.

    * அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தும் தமிழக அ.தி.மு.க. அரசுக்கு கண்டனம்.

    * ஊழல் விசாரணை நடத்த லோக் ஆயுக்தா சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

    * உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்.

    * தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * மத்திய அரசு பிடிவாத சக்திகளுக்கு ஆதரவு அளிப் பதை கைவிட வேண்டும்.

    * இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பை கைவிட வேண்டும்.

    * நீட் நுழைவு தேர்வு நடத்தக் கூடாது.

    * ஒரே தேர்தல்-ஒரே தேசம் திட்டத்தை கைவிட வேண்டும்.

    * சிறு தொழில்களை பாதிக்கும் வரியை ரத்து செய்ய வேண்டும்.

    * வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல், விலை உயர்வு, பண மதிப்பு சரிவு தொழில் துறை வீழ்ச்சிக்கு காரணமான மத்திய பா.ஜனதா கட்சியை வீழ்த்த மக்கள் தயாராக வேண்டும்.

    மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் சரத்பவார், யஷ்வந்த் சின்கா, மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை மந்திரி பேராசிரியர் ராமசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ரா. முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, நடிகர் சத்யராஜ் ஆகியோர் பேசுகிறார்கள்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஏற்புரையாற்றி பேசுகிறார். மாவட்ட செயலாளர் நா.முருகன் நன்றி கூறுகிறார். #MDMK #DMK

    Next Story
    ×