search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழில் தொடங்க அனுமதி வழங்குவதில் ஊழல் - ராமதாஸ் குற்றச்சாட்டு
    X

    தொழில் தொடங்க அனுமதி வழங்குவதில் ஊழல் - ராமதாஸ் குற்றச்சாட்டு

    தொழில் தொடங்க அனுமதி வழங்குவதில் ஊழல் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss #PMK

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தொழில் திட்டங்களுக்கான உரிமம் பெறுவதற்கும், கட்டுமான அனுமதி பெறுவதற்கும் தேவையில்லாத காலதாமதம் செய்யப்படுவதாகவும், இந்த வி‌ஷயத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு கடைசி இடத்தில் இருப்பதாகவும் தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழக அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல் தான் இதற்கு காரணமாகும். இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.

    இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்களாக திகழ்பவை எவை? என்பதைக் கண்டறியும் நோக்கத்துடன் தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட ‘பொருளாதார வளர்ச்சி நிறுவனம்’ அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. மொத்தம் 30 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையில் தொழில் அனுமதி மற்றும் கட்டிட அனுமதி அளிப்பதில் தமிழகம் மிக மோசமாக செயல்படுவதாக குற்றஞ்சாற்றப்பட்டுள்ளது.

    தொழில் மற்றும் கட்டிட அனுமதி 15 நாட்களுக்குள் வழங்கப்பட்டால் அது சிறப்பானது என்றும், 15 முதல் 45 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்பட்டால் மிதமானதாகவும், அனுமதி வழங்க 45 நாட்களுக்கு மேல் ஆனால் மோசமானதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தொழில் அனுமதிக்காக விண்ணப்பிக்கும் நிறுவனங்களில் 21 சதவீதம் நிறுவனங்களுக்கு மட்டும் தான் 15 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 52 சதவீதம் நிறுவனங்களுக்கு 45 நாட்கள் அவகாசத்திலும், 27 சதவீதம் நிறுவனங்களுக்கு 45 நாட்களுக்கு பிறகும் தான் அனுமதி வழங்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கட்டுமான அனுமதியைப் பொறுத்தவரை 5 சதவீதம் நிறுவனங்களுக்கு மட்டுமே 15 நாட்களுக்குள் அனுமதி தரப்படுகிறது. 47 சதவீதம் நிறுவனங்களுக்கு 45 நாட்களுக்கு முன்பாகவும், 48 சதவீதம் நிறுவனங்களுக்கு 48 நாட்களுக்கும் பிறகு தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வுகளின் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    தமிழக அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல்கள் தான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி தடைபடுவதற்கு காரணமாகும். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலான முதலீடுகள் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்றுள்ளன. இத்தகைய சூழலில் தான் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டாவது முறையாக வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது.

    அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்காமல் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதால் எந்த பயனும் ஏற்படாது. 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு எவ்வாறு தோல்வியடைந்ததோ, அதே போல் இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாடும் தோல்வியடைவது உறுதி.

    எனவே, தொழில் தொடங்க அனுமதி அளிப்பதில் நடைபெறும் ஊழலை ஒழிக்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். நேர்மையான அதிகாரிகள் குழுவை அமைத்து அதன் மூலம் தொழில் மற்றும் கட்டுமான அனுமதி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் தொழில் அனுமதி வழங்குவதற்காக வந்த விண்ணப்பங்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்த வெள்ளை அறிக்கையையும் தமிழக அரசு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #PMK

    Next Story
    ×