search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார தட்டுப்பாடு - 30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு
    X

    மின்சார தட்டுப்பாடு - 30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு

    தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு வராமல் தடுக்க 30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. #PowerShortage #TNGovernment
    சென்னை:

    தமிழ்நாட்டில் தற்போது மின் தட்டுப்பாடு நிலவுகிறது. இது அறிவிக்கப்படாத மின்வெட்டு என்று எதிர்க்கட்சியான தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

    மத்திய அரசு வழக்கத்தை விட 60 சதவீதம் நிலக்கரி குறைவாக வழங்குகிறது. அதே நேரம் காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் எதிர்பாராத வகையில் மிகவும் குறைந்து விட்டது. உற்பத்தி திறன் 1.2 சதவீதமாக குறைந்து விட்டது.

    தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் உற்பத்தி நிலையங்களில் கடந்த 13-ந்தேதி (நேற்று முன்தினம்) 13,751 மெகாவாட்டும், நேற்று 13,924 மெகாவாட்டும் மின் சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் நாள் ஒன்றுக்கு 18,204 மெகாவாட் மின்சாரம் தேவை.



    வழக்கமாக காற்றாலை மூலம் 8,255 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. ஆனால் நேற்று காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சார அளவு மிகவும் குறைந்து விட்டது. அதாவது 100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது.

    அனல்மின் நிலையங்களுக்கு தினமும் 20 ரெயில் பெட்டிகள் அளவு நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் 7 முதல் 8 ரெயில் பெட்டிகள் நிலக்கரி மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது.

    இதனால் மின்உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 2,510 மெகாவாட்டும், நேற்று 2,875 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டது. அதற்கு முன் தினசரி 4,320 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இத்தகைய காரணங்களால் தான் மின் உற்பத்தி பாதிப்பால் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கு 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது.

    தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் உற்பத்தி நிறுவனங்களில் தொடர்ந்து உற்பத்தி நடப்பதற்கு தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. எனவே தமிழக மின் உற்பத்திக்கு தேவையான தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை சப்ளை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

    எதிர்காலத்தில் இத்தகைய மின் தட்டுப்பாடு வராமல் தடுக்க நிலக்கரி அதிக அளவில் தேவைப்படுகிறது. எனவே 30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்கான டெண்டர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தமிழ்நாடு மின் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே தமிழ்நாட்டில், மின் தட்டுப்பாடுக்கான காரணம் பற்றி கேட்டதற்கு மின்துறை அமைச்சர் பி.தங்க மணி பதில் அளித்தார்.

    அதில், “கடந்த 10 மற்றும் 11-ந்தேதிகளில் காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு மிகவும் குறைந்து விட்டது. ஆண்டு பராமரிப்பு காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம் மற்றும் வல்லூர் அனல் மின்நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம் போன்ற காரணங்களால் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தற்காலிகமானதுதான். இது முன் எப்போதும் இல்லாத அளவு எதிர்பாராமல் நடந்தது. நிலைமை 3 நாளில் சீராகும் என தெரிவித்தார். #PowerShortage #TNGovernment
    Next Story
    ×