search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்சி செலவுக்காக மட்டுமே நடிப்பேன் - கமல்ஹாசன் பேச்சு
    X

    கட்சி செலவுக்காக மட்டுமே நடிப்பேன் - கமல்ஹாசன் பேச்சு

    சினிமாவில் இனி நான் வேலை பார்ப்பது என்றால் என் கட்சியை நடத்துவதற்கான செலவுக்காக மட்டும்தான். அரசியலை தவிர எனக்கு வேறு வேலைகள் இருக்கக்கூடாது. இருக்காது என்று கமல்ஹாசன் கூறினார். #KamalHassan #MakkalNeedhiMaiam
    வேலூர்:

    வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவர்கள் கலை விழா நேற்று நடந்தது. கமல்ஹாசன் விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    மருத்துவர்களின் பெருமை, பெயர் இல்லாவிட்டாலும் பல 100 வரு‌ஷம் வாழும். இந்த மருத்துவக் கல்லூரியை உருவாக்கிய ஐடாஸ்கடர் பெயர். அவர் முகம் மறந்து போகலாம். ஆனால் அவர் விட்டுச்சென்ற இந்த கல்வி காட்டில் மலர்கள் மலர்ந்து கொண்டும், கனிகள் கனிந்து கொண்டே இருக்கும்.

    நாளைய மருத்துவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. நாங்கள் எல்லாம் இந்த மருத்துவ கல்லூரியில் நடனம் ஆடினோம் என்றுதான் பெருமைகொள்ள முடியும். ஆனால் உங்கள் பெருமை 100 ஆண்டுகள் ஆனாலும் நீடிக்கும்.

    8-ம் வகுப்பு கூட மிதிக்காத நான் இங்கு வந்தது உங்களுக்கு மகிழ்ச்சி. எனக்கு பெருமை. நான் இங்கு வந்தது ஒரு தாகத்தால். எனக்கு நல்ல தமிழகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் தாகமும் இருக்கிறது. அது எனக்கு மட்டும் இல்லை. கைதட்டும் அனைவருக்கும் இருக்கிறது.

    நல்ல தமிழகம் என்பது ஒரு மனிதரிடம் இருந்து வருவது அல்ல. பலர் அதை நினைக்க வேண்டும். நாங்கள் திட்டமிடுவது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுகிறது அரசு அல்ல. அன்புஅரசு 100 ஆண்டுகள் கூட இருக்கும். மருந்து, மாத்திரை தாண்டி ஏழைகளை நோக்கி உங்கள் மருத்துவம் நீள இருக்கிறது.

    மனிதநேயம் உங்கள் மூலம் இன்னும் வாழும். அதை காப்பாற்ற வேண்டியது என் கடமை. அதற்காக எந்த மூலையில் இருந்தாலும் உங்களைத் தேடி வருவேன்.

    நான் இப்போது செய்துகொண்டிருப்பதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் செய்திருக்க வேண்டும். அப்படி நிகழ்ந்திருந்தால் நான் இப்படி உங்களுடன் சேர்ந்து புலம்பிக்கொண்டிருக்க மாட்டேன். தமிழகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதை பற்றி சிந்தித்துகொண்டிருப்போம்.

    நமக்கு எதுக்கு, இது எல்லாம் ஏன் என்று யோசித்தேன். என் சலவை சட்டை கசங்கிவிடுமோ என்று பயந்தேன். இனி பயப்பட மாட்டேன். ஏதோ சினிமா வசனம் பேசுவது போல் தோன்றலாம். ஆனால் அப்படி இல்லை. இதை எல்லாம் எப்போதோ சினிமாவில் பேசிவிட்டேன்.

    நாங்கள் மற்றவர்களுக்காக சிரிப்பவர்கள், அழுபவர்கள். எனவே நான் இப்போது பேசுவதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். மீதம் இருக்கும் என் நாட்கள் என்னை வாழ வைத்த மக்களுக்காகத்தான்.



    இனி நான் சினிமாவில் வேலை பார்ப்பது என்றால் என் கட்சியை நடத்துவதற்கான செலவுக்காக மட்டும்தான். அரசியலை தவிர எனக்கு வேறு வேலைகள் இருக்கக்கூடாது. இருக்காது. இதை உங்களிடம் சொல்லக் காரணம் இவரே செய்யும்போது நான் செய்யக்கூடாதா என்ற எண்ணம் உங்களுக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான்.

    நான் ஒரு சினிமா நடிகனாக சம்பாதித்து செட்டில் ஆகி நிம்மதியாக சென்று இருக்கலாமே... 63 வயதில் ஏன் இங்கே வரவேண்டும்? இதை சிந்தியுங்கள். 23, 24 வயதில் நான் செய்யக்கூடாதா என்று உங்களுக்கு தோன்ற வேண்டும்.

    கல்லூரியில் அரசியல் பேசக்கூடாது என்பார்கள். கட்சி அரசியல் தான் பேசக் கூடாது. மக்கள் அரசியல் பேசலாம். உங்களை ஆட்டுவிப்பதே அரசியல் தான். அதை பேச ஏன் தயங்க வேண்டும்?

    உங்கள் பங்களிப்பு இருந்தால் தான் நாட்டை மாற்ற முடியும். அரசியலை அசிங்கம் என்று நினைத்து விடக்கூடாது. ஒதுங்கக்கூடாது.

    மாணவர்கள் அரசியல் பேசியே ஆக வேண்டும். வருங்காலம் உங்களை ஆட்டி வைக்க போகிறதா? நல்லதாக அமைய போகிறதா? என்பதை அரசியல் தான் முடிவு செய்கிறது.

    அரசியலை கண்டு ஒதுங்காதீர்கள். புரிந்து கொள்ளுங்கள். அரசியலில் மாணவர்கள் பங்களிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் நாட்டை திருத்த முடியும்.

    ஏழைகள் காசு வாங்கி கொண்டு ஓட்டுபோடும் அந்த கொடுமையை மூழ்கடிக்க மாணவர்களின் வெள்ளத்தால் தான் அடித்து செல்ல முடியும்.

    இப்போது ஒதுங்கிவிட்டால் வயதான பிறகு என்னை போல் வருத்தப்படும் சூழ்நிலை உருவாகும். இது என்னோடு போகட்டும்.

    அந்த வருத்தம் இந்த தலைமுறையினருக்கு இல்லாமல் போக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #KamalHassan #MakkalNeedhiMaiam

    Next Story
    ×