search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவருக்கு அணிவிக்கப்படும் முத்து, ரத்தின கற்கள் மாயம்
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவருக்கு அணிவிக்கப்படும் முத்து, ரத்தின கற்கள் மாயம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவருக்கு அணிவிக்கப்படும் ரத்தின அங்கி மற்றும் முத்தங்கிகளில் முத்து, ரத்தின கற்கள் மாயமாகி உள்ளதாக யானை ராஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். #SrirangamTemple
    திருச்சி:

    கோவில் சிலைகள் கடத்தல் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ள யானை ராஜேந்திரன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 1959-ம் ஆண்டுக்கு பின்னர் தான் பல கோவில்களில் உள்ள மிகவும் பழமையான சிலைகள் திருடப்பட்டும், கடத்தப்பட்டும் இருக்கின்றன. இதுவரை நடத்தப்பட்ட விசாரணை மற்றும் ஆய்வின் மூலம் சுமார் 4 ஆயிரம் சிலைகள் கடத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதில் 261 சிலைகள் வெளிநாடுகளில் உள்ளன. இவை எல்லாம் வெறும் சிலைகள் அல்ல. தெய்வ திருமேனிகள். வெளிநாடுகளில் உள்ள அனைத்து சிலைகளையும் மீட்டு கொண்டு வருவதற்கு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரை இந்த பணியில் இருந்து மாற்றம் செய்யக்கூடாது. வழக்கையும் சி.பி.ஐ.க்கு மாற்றக்கூடாது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவர் ரெங்கநாதரின் திருமேனியில் போர்த்தப்படும் ரத்தின அங்கி மற்றும் முத்தங்கிகள் இரண்டு முறை வெளியே கொண்டு செல்லப்பட்டு இருக்கின்றன. மிகவும் பழமையான இந்த அங்கிகளில் முத்துக்கள், வைரம், வைடூரிய கற்கள் மற்றும் நவரத்தின கற்கள் 500-க்கும் மேல் இருந்தன.

    ஆனால் தற்போது 10 முத்துக்களும், 15 ரத்தின கற்களும் தான் இருக்கின்றன. மற்றவை இருந்த இடங்களில் வெறும் ஓட்டை தான் உள்ளன. இந்த ரத்தின கற்கள், முத்துக்கள் ஆகியவை எப்படி மாயமானது? என்பதை கண்டுபிடிக்க வேண்டுமென ஐகோர்ட்டில் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். திப்பு சுல்தான், ரெங்கநாதர் கோவிலுக்கு கொடுத்த நகைகள் எங்கே போனது என தெரியவில்லை.

    சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கினால் விவசாய விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருவது தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. மனைப்பிரிவு அங்கீகாரம் மற்றும் மற்றும் வீட்டு மனைகளை முறைப்படுத்துவது தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மீறி மாவட்ட அளவில் உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் முறைகேடு செய்து வருகிறார்கள்.

    திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் தாலுகா மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நாச்சிக்குறிச்சி ஊராட்சியில் விதிமுறைகளை மீறி மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். இந்த வழக்கில் இன்னும் இரண்டு வாரங்களில் இறுதி தீர்ப்பு வர உள்ளது. தமிழகத்தில் 13 லட்சம் வீட்டுமனைகள் முறைப்படுத்தப்படாமல் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். #SrirangamTemple

    Next Story
    ×