
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்டத்தில் 12 இடங்களில் இன்று மறியல் போராட்டம் நடந்தது. காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு நடந்த மறியலுக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். நகர தலைவர் அலெக்ஸ், மாவட்ட துணைத்தலைவர் மகேஷ்லாசர், நிர்வாகிகள் கே.டி.உதயம், தங்கம் நடேசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லச்சாமி, செயற்குழு உறுப்பினர் உசேன், மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணி, மரிய ஸ்டீபன், அஜிஸ்,
ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, சி.பி.எம்.எல். மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து, திராவிடர் கழக மண்டல செயலாளர் வெற்றிவேந்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டவாறு அண்ணா பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை பாதுகாப்புக்கு நின்ற நாகர்கோவில் டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
125-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கருங்கலில் நடந்த மறியல் போராட்டத்தில் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாரும், திங்கள்நகரில் நடந்த மறியல் போராட்டத்தில் பிரின்ஸ் எம்.எல்.ஏ.வும் கலந்து கொண்டனர். அவர்களையும் மறியலில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் கொட்டாரம், திருவட்டார், குலசேகரம், மார்த்தாண்டம், மேல்புறம் உள்ளிட்ட இடங்களிலும் மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.