search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பெரிய தேர்பவனி
    X

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பெரிய தேர்பவனி

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பெரிய தேர்பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாக மிகுதியில் கைத்தட்டி ‘மரியே வாழ்க‘ என கோ‌ஷமிட்டு பிரார்த்தனை செய்தனர். #velankannichurch

    வேளாங்கண்ணி:

    இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 11 நாட்கள் திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம்(ஆகஸ்ட்) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் பேராலயத்திலும், பேராலய வளாகத்தில் உள்ள விண்மீன் ஆலயம், மேல்கோவில், கீழ்கோவில் ஆகிய இடங்களிலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதேபோல சிலுவை பாதை வழிபாடு, ஜெப மாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்றன.

    வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் பிரதான நிகழ்ச்சியான மாதா பெரிய தேர்பவனி நேற்று இரவு நடந்தது. நிகழ்ச்சியில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் பேராலய அதிபர் பிரபாகர், பங்குதந்தை சூசை மாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தைகள் மற்றும் அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர். திருப்பலியை தொடர்ந்து தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தேரை புனிதம் செய்தார்.

    இதையடுத்து இரவு 7.55 மணிக்கு பேராலயத்தின் மணிகள் ஒலிக்க, மின் விளக்கு மலர் அலங்காரத்துடன் தயார் நிலையில் இருந்த புனித ஆரோக்கிய மாதா சொரூபம் தாங்கிய பெரிய தேர், பேராலய முகப்பில் இருந்து புறப்பட்டு சென்றது.

    தேர் புறப்பட்டதும் பேராலயத்தை சுற்றி திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாக மிகுதியில் கைத்தட்டி ‘மரியே வாழ்க‘ என கோ‌ஷமிட்டு பிரார்த்தனை செய்தனர். மாதா தேருக்கு முன்பாக புனித மிக்கேல் சம்மனசு, புனித சூசையப்பர், புனித அந்தோணியார், புனித செபஸ்தியார், அமலோற்பவ மாதா, புனித உத்திரியமாதா ஆகியோரின் தேர்கள் வண்ண விளக்குகளின் அலங்காரங்களுடன் அணிவகுத்தன.

    இந்த 7 தேர்களின் முன்பாகவும், தேரை பின்தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் அலங்கார தேர்கள் வலம் வரும் நிகழ்ச்சி கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. தேர்வலம் வரும்போது பக்தர்கள் தேர் மீது பூக்களை தூவி ஜெபித்தனர். தேர்பவனி பேராலய முகப்பிற்கு வந்து சேர்ந்ததும், புனித ஆரோக்கிய மாதாவிற்கு நன்றி செலுத்தும் விதமாக பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது.

    விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் கனகராஜ் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். #velankannichurch

    Next Story
    ×