search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள மக்களுக்கு கொடுக்க நிவாரண பொருட்களுடன் வைகோ புறப்பட்டு சென்றபோது எடுத்த படம்.
    X
    கேரள மக்களுக்கு கொடுக்க நிவாரண பொருட்களுடன் வைகோ புறப்பட்டு சென்றபோது எடுத்த படம்.

    நெல்லையில் இருந்து நிவாரண பொருட்களுடன் வைகோ கேரளா பயணம்

    நெல்லையில் இருந்து இன்று அதிகாலை ரூ.30 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களுடன் வைகோ கேரளா புறப்பட்டு சென்றார். #KeralaFloods #Vaiko
    நெல்லை:

    கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவ ம.தி.மு.க. சார்பாக நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டன. இந்த நிவாரண பொருட்கள் நெல்லையில் இருந்து 4 லாரிகளில் ஏற்றப்பட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு கேரளா கொண்டு செல்ல புறப்பட்டு சென்றன.

    இதை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். நிவாரண பொருட்களுடன் வைகோவும் நெல்லையில் இருந்து காரில் கேரளா சென்றார்.

    அவருடன் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள் ரமேஷ், செல்வம், செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி மற்றும் நிர்வாகி களும் வைகோவுடன் கேரளா சென்றனர்.

    100 ஆண்டு காலம் இல்லாத வகையில் கேரளாவில் பேய் மழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டது. ம.தி.மு.க. சார்பாக சகோதரத்துவ மனப்பான்மையுடன் அவர்களுக்கு உதவ ரூ.20 லட்சம் செலவில் அரிசி, மருந்து பொருட்கள், உடைகள் என நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் ம.தி.மு.க. சார்பாக ரூ.10 லட்சம் நிதி உதவியும் அளிக்கப்படுகிறது.

    கேரள முதல்வர் பினராய் விஜயன் அமெரிக்கா சென்றுள்ளதால், எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலாவை சந்தித்து இந்த நிதி உதவியை நேரில் வழங்குகிறேன். ஆலப்புழா, வயநாடு பகுதியில் நிவாரண முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் நிவாரண பொருட்களை நேரில் வழங்க உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து இன்று பகல் கேரளாவில் உள்ள வயநாடு, ஆலப்புழா பகுதிகளுக்கு சென்ற வைகோ, ம.தி.மு.க. நிர்வாகிகளுடன் கேரள மக்கள் தங்கி உள்ள முகாம்களுக்கு சென்று பொருட்களை வழங்கினார்.

    எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் அரசு அதிகாரிகளிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும் வைகோ வழங்கினார்.  #KeralaFloods #Vaiko


    Next Story
    ×