search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் வாலிபர் வெட்டிக்கொலை
    X

    தூத்துக்குடியில் வாலிபர் வெட்டிக்கொலை

    தூத்துக்குடியில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியை சேர்ந்த தொழிலாளி பாலமுருகன். இவரது மகன் அஜித்குமார் (வயது21). கோவையில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தார்.

    பாலமுருகன் இதற்கு முன் தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அப்போது அவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த சங்கர் என்பவரின் குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து பாலமுருகன் அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதிக்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்தார்.

    இந்நிலையில் கோவையில் வேலை பார்த்து வந்த அஜித்குமார் சமீபத்தில் அங்கிருந்து தூத்துக்குடிக்கு வந்துவிட்டார். அதன்பிறகு கோவைக்கு திரும்பி செல்லாமல் இங்கேயே கூலி வேலை பார்த்து வந்தார். ராஜபாண்டி நகர் பகுதியில் உள்ள கோவிலில் தற்போது திருவிழா நடந்து வருகிறது. அதில் கலந்து கொள்வதற்காக அஜித்குமார் நேற்றிரவு அங்கு சென்றார்.

    திருவிழாவை பார்த்து விட்டு நள்ளிரவு ஒரு மணியளவில் தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண் டிருந்தார். அப்போது ராஜபாண்டி நகரில் உள்ள மாதா கெபி அருகே அமர்ந்து 3 பேர் மது குடித்து கொண்டிருந்தனர்.

    அவர்களில் ஏற்கனவே அஜித்குமாரின் தந்தையுடன் தகராறு செய்து வந்த பக்கத்து வீட்டுக்காரரான சங்கரின் மகன் பாரதி (21) என்பவரும் இருந்தார். அவர்கள் 3 பேரும் அஜித்குமாரை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டு தாக்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமார், ‘உங்களை வெட்ட வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து வருகிறேன்’ என ஆவேசமாக பேசியவாறு அங்கிருந்து வேகமாக சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பாரதி, சம்பவம் குறித்து தனது தந்தை சங்கரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து சங்கர், அவரது மகன் பாரதி உள்பட 4 பேர் சேர்ந்து அஜித்குமாரை மடக்கி பிடித்து தாக்கினர். பின்பு தங்களிடம் இருந்த வாளால் அஜித்குமாரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். பலத்த வெட்டுக்காயம் அடைந்த அஜித்குமார் சம்பவ இடத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

    இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஜித்குமாரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.

    அஜித்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியின் பிணவறையில் வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அஜித்குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.

    கொலை நடந்த இடத்தில் தூத்துக்குடி மாநகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக சங்கர், பாரதி உள்பட 4 பேர் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    அஜித்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் ராஜபாண்டி நகர் மற்றும் அந்தோணியார்புரம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×