search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலம் கையகப்படுத்துவற்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய பிரிவு சட்டவிரோதம் இல்லை - ஐகோர்ட்டு
    X

    நிலம் கையகப்படுத்துவற்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய பிரிவு சட்டவிரோதம் இல்லை - ஐகோர்ட்டு

    8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டப்பிரிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது இல்லை. சட்டவிரோத மானதும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. #GreenwayRoad #Highcourt

    சென்னை:

    சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு கையப்படுத்தப்பட உள்ள நிலத்தை தமிழக அரசு அளவு எடுத்தது. இதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தங்களது விவசாயநிலங்களை எல்லாம் அரசு கையப்படுத்த அளவிடுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த திட்டத்துக்காக, குளங்கள், மரங்கள், மலைகளை அழிக்க அரசு முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டினர்.

    இந்த திட்டத்தை எதிர்த்தும், இந்த திட்டத்துக்காக நிலத்தை கையப்படுத்துவதை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

    இந்த வழக்குகளை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்குகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிபதிகள் விசாரித்தபோது, கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தில் இருந்து, அதன் உரிமையாளர்களை வெளியேற்றக்கூடாது என்றும் அந்த நடவடிக்கைக்கு தடை விதித்தும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

     


    இந்த நிலையில், இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.

    அந்த வழக்கில், 2013ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த நிலத்தை கையப்படுத்துவதற்கான சட்டத்தில், பிரிவு 105 அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்த 105வது பிரிவின்படி, நெடுஞ்சாலை, அணுஉலை, ரெயில்வே போன்ற அவசர தேவைகளுக்கான திட்டங்களாக இருந்தால், சமூக பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளாமல் நேரடியாக நிலத்தை கையப்படுத்தலாம் என்று கூறுகிறது. அதனால், இந்த பிரிவு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, அந்த பிரிவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘பிரிவு 105 அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது இல்லை. இந்த பிரிவு சட்டவிரோதமானதும் இல்லை. இந்த பிரிவை ஏற்றுக் கொள்கிறோம்’ என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.

    சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கான நிலத்தை கையப்படுத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

    தற்போது, 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலம் கையப்படுத்தும் சட்டத்தின் பிரிவு 105 செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், இந்த பிரிவை பயன்படுத்தி நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட அதிகாரிளுக்கு தடை எதுவும் ஏற்படாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். #GreenwayRoad #Highcourt

    Next Story
    ×