search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அழகிரியை தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் - நாஞ்சில் சம்பத் பேட்டி
    X

    அழகிரியை தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் - நாஞ்சில் சம்பத் பேட்டி

    அழகிரியை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து, அவ்வாறு சேர்த்துக் கொண்டால் தி.மு.க. வலிவும், பொலிவும் பெறும் என்பதும் எனது எண்ணம் என்று நாஞ்சில் சம்பத் கூறினார். #NanjilSampath #MKAlagiri #DMK
    நாகர்கோவில்:

    கட்சி அரசியலில் இருந்து விலகி இருக்கும் நாஞ்சில் சம்பத், அவ்வப்போது அரசியல் கருத்துக்களை தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

    தி.மு.க. தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதையடுத்து சென்னையில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து அவர், இன்று மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. என்ற இயக்கத்தில் அரை நூற்றாண்டு காலம் தலைவராக இருந்து வழி நடத்திய கருணாநிதி மறைவுக்கு பின் அந்த இயக்கத்தின் புதிய தலைவராக மு.க. ஸ்டாலின் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிளை கழக நிர்வாகி முதல் உயர்மட்ட நிர்வாகி வரை அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை தலைவர் பதவியில் அமர்த்தி உள்ளனர். உலகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் வரலாற்று பாதையில் கால வெள்ளத்தால் கரைந்து போகாத கட்சி தி.மு.க.

    அதன் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று இருப்பது சாலச் சிறந்தது. தலைமை பொறுப்புக்கு தகுதியானவர் மு.க. ஸ்டாலின். திராவிட இயக்கம் நிலைத்து நிற்க வேண்டும் என்று கருதியும், திராவிட இயக்கத்தின் பிரசாரகன் என்ற முறையிலும் சென்னையில் நேற்று மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.



    மு.க. ஸ்டாலினும், மு.க. அழகிரியும் ஒரு தாய் பெற்ற புதல்வர்கள். அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

    மு.க. அழகிரியை பொறுத்தமட்டில் அவர், தி.மு.க.வில் இருந்தபோது தென்மண்டல அமைப்புச் செயலாளராக பணியாற்றினார். மத்திய மந்திரியாக பொறுப்பு வகித்தார். கட்சி தொண்டர்களுடன் நெருங்கி பழகியவர். இப்போது தி.மு.க.வில் அவர் இல்லை. அவரை தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அவ்வாறு சேர்த்துக் கொண்டால் தி.மு.க. வலிவும், பொலிவும் பெறும் என்பதும் எனது எண்ணம். ஆனால் முடிவு எடுக்க வேண்டியது மு.க. ஸ்டாலின் கையில் உள்ளது.

    திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடந்தபோது கருணாநிதி அங்கு முழுமையாக பிரசாரத்திற்கு செல்ல முடியாத நிலையில் இருந்தார். அதன் பிறகும் அங்குள்ள மக்கள் அவரை 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தனர். இப்போதும் தேர்தல் நடந்தால் அங்கு தி.மு.க.தான் வெற்றி பெறும்.

    அழகிரி போட்டியிட்டால் வெற்றி பெறுவாரா? என்பதை விட தி.மு.க. சார்பில் யார் போட்டியிட்டா லும் அவர்தான் வெற்றி பெறுவார் என்பது உறுதி.

    திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க.வுக்கு கை கொடுக்கும் தொகுதி. ஆனால் இப்போது அங்கு தேர்தல் நடந்தால் அதன் வெற்றி திருத்தணி மலையில் எதிரொலிக்கும் வகையில் அமையும்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளியானால் அது ஆளும் அரசுக்கு எதிராக இருக்கும் என்பதுதான் எனது எண்ணம். அவ்வாறு நடந்தால் இந்த ஆட்சி நீடிக்குமா? என்பதை தினகரன்தான் முடிவு செய்ய வேண்டும்.

    முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்தபோது முதல்-அமைச்சர் தெரிவித்த கருத்து சரியல்ல. ஒரு மனிதனுக்கு காய்ச்சல் ஏற்படுவதுபோல மதகு உடைந்ததை ஒப்பிட்டு கூறி உள்ளார். இதை ஒருபோதும் ஏற்க முடியாது.

    நேற்று நான், திருவாரூர் சென்றிருந்தேன். அங்கு நாகப்பட்டினம் முத்தமிழ் மன்றத்தில் நடந்த கலைஞருக்கான இரங்கல் கூட்டத்தில் பங்கேற்று பேசினேன். நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் நான், பயணம் செய்தபோது பயிர் நிலங்கள் பாளம், பாளமாக வெடித்து கிடப்பதை கண்டேன்.

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்களில் தண்ணீர் இல்லை. கால்வாய்களும் வறண்டு கிடந்தன. ஆனால் கொள்ளிடத்தில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடலுக்கு வீணாகச் சென்றது. வெள்ளத்தை சேமிக்க தெரியாத ஆட்சி நடக்கிறது. இதனால் மக்கள் கோபத்தில் உள்ளனர். இது மட்டுமல்ல, இந்த ஆட்சிக்காலத்தில் நடந்த நீட் பிரச்சினை, ஸ்டெர்லைட் விவகாரம் போன்றவற்றில் அரசின் அணுகுமுறையும், நடவடிக்கையும் சரியில்லை.

    அ.தி.மு.க. ஒருங்கிணைந்த பிறகும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும், மதுசூதனனுக்கும் ஒருங்கிணைப்பு இல்லை. இவர்கள் இருவரும் ஜெயலலிதா இருந்தபோதே ஏழாம் பொருத்தமாக இருந்தனர். இப்போதும் அப்படியே இருக்கிறார்கள்.

    மதுசூதனை ஒரு பெரிய மனிதர் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார். அ.தி.மு.க.வில் இப்போது கட்டுப்பாடு இல்லை. தடி எடுத்தவர்கள் அனைவரும் தண்டல்காரர்களாக இருக்கிறார்கள். இதனால் மக்களின் கோபம் அவர்கள் மேல் திரும்பி உள்ளது.

    இப்போது நான், கட்சி அரசியலில் இல்லை. இதனால் எனக்கு வருவாய் வரத்து குறைந்துள்ளது. என்றாலும் நான், நிம்மதியாக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #NanjilSampath #MKAlagiri #DMK
    Next Story
    ×