search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது - அதிகாரிகள் தகவல்
    X

    சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது - அதிகாரிகள் தகவல்

    வீராணம் தண்ணீர் வருவதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #VeeranamLake

    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகள் உள்ளன. 4 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    தற்போது ஆயிரத்து 234 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 11 சதவீதம் ஆகும்.

    சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டுவிட்டது. பூண்டி ஏரியில் 117.25 மில்லியன் கனஅடியும், புழல் ஏரியில் 753 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 467 மில்லியன் கனஅடியும் நீர் உள்ளது.

    ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் கடந்த ஆண்டைப் போல இப்போதும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படலாம் என்ற கவலையில் பொது மக்கள் உள்ளனர்.

    வீராணம் ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் சென்னைக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள ஏரிகளில் நீர்மட்டம் குறைந்தாலும் வீராணம் ஏரி தண்ணீரை வைத்து குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும்.

    வீராணம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 47 அடி தண்ணீர் உள்ளது (மொத்த நீர்மட்டம் 47.50 அடி) ஏரிக்கு கீழ் அணையில் இருந்து 1,400 கனஅடி தண்ணீர் வருகிறது. 74 கனஅடி தண்ணீர் சென்னை குடிநீருக்கு அனுப்பப்படுகிறது.

    இது குறித்து சென்னை மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் கூறியதாவது:-

    ‘கடந்த ஆண்டு 4 ஏரிகளும் சேர்த்து வெறும் 262 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருந்தது. ஆனால் தற்போது ஆயிரத்து 234 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது. இதனை வைத்து அக்டோபர் மாதம் இறுதி வரை குடிநீர் தேவையை சமாளிக்க முடியும்.

    நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையம் மற்றும் வீராணம் ஏரியில் இருந்து பெறப்படும் நீர் கைகொடுக்கும்.

    மேலும் தேவை அதிகரித்தால் கல்குவாரி நீர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து நிலத்தடி நீரை வினியோகிக்கவும் திட்டம் உள்ளது. எனவே தண்ணீர் தட்டுப்பாடு குறித்து பொது மக்கள் கவலைப்பட தேவையில்லை’ என்றனர்.

    Next Story
    ×