search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தந்தையைபோல் ஆளுமையும், திறமையும் பெற்றவர் மு.க. ஸ்டாலின் - தலைவர்கள் பேச்சு
    X

    தந்தையைபோல் ஆளுமையும், திறமையும் பெற்றவர் மு.க. ஸ்டாலின் - தலைவர்கள் பேச்சு

    கருணாநிதியின் அனைத்து ஆளுமையும், திறமையும் பெற்றவர் மு.க.ஸ்டாலின் என்று நெல்லையில் நடந்த கருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் தலைவர்கள் கூறியுள்ளனர். #Karunanidhi #MKStalin #DMK
    நெல்லை:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தி.மு.க. சார்பில் நெல்லை கோர்ட்டு எதிரே உள்ள பெல் மைதானத்தில் புகழ் வணக்க கூட்டம் நேற்று நடந்தது. “அரசியல் ஆளுமை: கலைஞர்” என்ற தலைப்பில் நடந்த இந்த கூட்டத்துக்கு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.

    இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சி மாநில பொது செயலாளர் அப்துல் சமது உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தினார்கள்.

    முன்னதாக கூட்ட மேடையில் கருணாநிதி படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு கி.வீரமணி தலைமையில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    கி.வீரமணி:


    கலைஞர் மறைவுக்கு ஆறுதல் செலுத்தும் வகையில் ஸ்டாலின் தி.மு.க.வின் தலைவராக உள்ளார். திராவிட இயக்கத்தின் 4-வது அத்தியாயமாக ஸ்டாலின் உருவெடுத்து உள்ளார். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோருக்கு பிறகு ஏற்பட்டு உள்ள வெற்றிடத்தை நிரப்பும் துணிவோடு ஸ்டாலின் வந்து உள்ளார்.

    இங்கு அனைத்து அரசியல் கட்சிகள் ஒன்று கூடி இருப்பது திராவிட இயக்கம் நாட்டுக்கு தந்துள்ள அரசியல் பண்பாடு ஆகும். தி.மு.க. கொடியின் லட்சியம் கருப்பு, சிவப்பு ஆக வேண்டும் என்பது தான். ஆனால் ஒரு போதும் சிவப்பு காவி ஆகாது. நீங்கள் உங்கள் வழியில் பாடுபடுங்கள். நாங்கள் எங்கள் வழியில் பாடுபடுகிறோம்.

    அரசியல் பண்பாட்டை வளர்க்கும் நாம் பொது மேடையில் கலந்து கொள்வதால் நமது சாயம் மாறிவிடாது. கருணாநிதியின் பாடத்தை கற்றுக் கொடுக்க அடுத்த ஆசானாக ஸ்டாலின் வந்துவிட்டார். அவரை பின் தொடருங்கள். கருணாநிதியின் அனைத்து ஆளுமையும், திறமையும் பெற்றவர் ஸ்டாலின். திராவிட இயக்க வரலாற்றின் 4-வது அத்தியாயம் தொடங்கட்டும்.

    திருநாவுக்கரசர்:

    கருணாநிதியின் புகழ் கடல் போன்றது. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்படுகிறார். அவர், கலைஞர் வழியை பின்பற்றி கட்சியை வழிநடத்த வேண்டும். எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் கருணாநிதியை பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். தமிழ் மக்கள் இருக்கும் வரை கருணாநிதியின் நினைவு இருந்து கொண்டே இருக்கும்.

    தமிழிசை சவுந்தரராஜன்:

    நடக்காததையும் நடத்தி காட்டுபவர் கருணாநிதி. அவரால் தான் ஒரு வீரமணியையும், தமிழிசையையும் பக்கத்தில் உட்கார வைக்க முடியும். மொழி, நட்பு, அரசியல் ஆகியவற்றில் ஆளுமை கொண்டவர் கலைஞர். அதனால் தான் அவர் தோல்வியை கண்டது இல்லை. பா.ஜனதாவை பொறுத்தவரை அரசியல் நாகரிகம் கொண்டவர்கள்.

    எதிர்கட்சிகளுக்கு மதிப்பு கொடுப்போம். தி.மு.க.வினரும் வாஜ்பாய் மறைந்த உடன் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த அரசியல் நாகரிகம் தான் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் நாங்கள் கலந்து கொள்கிறோம். கருணாநிதி சமூக நீதிக்காக போராடி கடின உழைப்பால் உயர்ந்த இடத்திற்கு வந்தவர். அவர் வழியில் மு.க.ஸ்டாலின் வர வேண்டும்.

    வைகோ:


    கருணாநிதி நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு மூன்று முறை என்னை அனுப்பி அரசியல் முகவரி தந்தார். கருணாநிதி உடல்நலம் குன்றி நினைவோடு இருந்தபோது அவரது வீட்டிற்கு சென்று பார்த்தேன். அப்போது, அவரிடம் நான் 29 ஆண்டுகாலம் கலைஞருக்கு கவசமாக இருந்தேன். இனி என் உயிர் இருக்கும் வரை மு.க.ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன் என்று கூறிக்கொள்கிறேன் என்று தெரிவித்தேன்.

    அவருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மு.க.ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன். கருணாநிதி நமது நாட்டிற்காக மரணத்திற்கும் அஞ்சாமல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். அந்த போராட்டத்தில் பங்கேற்று அரசியல் பயின்ற மு.க.ஸ்டாலின் தலைவராக உள்ளார்.

    பாலகிருஷ்ணன்:

    கருணாநிதியின் மறைவு தி.மு.க.வுக்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கும் ஏற்பட்ட இழப்பு ஆகும். இன்று நாடு பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாக்க இட ஒதுக்கீடு, மதசார்பின்மை, தமிழர் உரிமை ஆகியவற்றை பாதுகாக்க தி.மு.க.வுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எப்போதும் இணைந்து பணியாற்றும்.

    காதர் மொய்தீன்:

    கலைஞரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர் 64 கலைகளை உள்ளடக்கியவர். அவர் ஏராளமான படைப்புகளை உருவாக்கி இருக்கிறார். இலக்கியங்கள், இதிகாசங்கள் கற்று உலக அளவில் தத்துவங்களை வெளியிட்டவர். சிறுபான்மை மக்கள் மீது பேரன்பு கொண்டவர் கருணாநிதி. அந்த சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற வேண்டும் என்று 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினார். கலைஞரின் ஆளுமை ஸ்டாலினுக்கு உண்டு. அவரும் தமிழ் சமுதாயத்தை வழி நடத்த வர வேண்டும்.

    ஜி.கே.மணி:

    கலைஞர் ஒரு சகாப்தம். அவர் மறைந்தாலும் தமிழ் மக்களின் உணர்வுகளில் நிலைத்து நிற்கிறார். சட்டமன்றத்தில் நாங்கள் அவருடன் பல நாட்கள் பணியாற்றி இருக்கிறோம். தனிப்பட்ட முறையில் அவர் மீது நாங்கள் மிகுந்த அன்பு கொண்டு உள்ளோம். கருணாநிதி மிகப்பெரிய தலைவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    முத்தரசன்:

    சோவியத் ரஷியாவில் கம்யூனிஸ்டு தோல்வியை கண்டபோது, பல விமர்சனங்கள் வந்தன. அப்போது கலைஞர் கம்யூனிஸ்டு இயக்கங்களுக்கு இது ஒரு பின்னடைவு தான் என்றாலும் மீண்டும் எழுந்து வரும் என்று கூறினார். பெரியார், அண்ணாவை கருணாநிதி சந்திக்காமல் இருந்திருந்தால், கம்யூனிஸ்டு கட்சிக்கு வந்து இருப்பார்.

    தொல்.திருமாவளவன்

    கருணாநிதி அனைத்து சமுதாய மக்களும் சாதி, மத பாகுபாடின்றி ஒரே இடத்தில் வாழவைக்கும் வகையில் 100க்கும் மேற்பட்ட சமத்துவபுரங்களை அமைத்தார். பெரியார், அண்ணா ஆகியோரை கருணாநிதி தனது உள்ளத்தில் வைத்து இருந்தார் என்பதற்கு சமத்துவ புரமே சாட்சி. கருணாநிதி இல்லாவிட்டால் சமூக நீதியை அழித்து இருப்பார்கள். கருணாநிதியின் கனவை ஸ்டாலின் தொடர்ந்து செய்தால் தான் தனது தலைவருக்கு செய்கிற கடமையாகும்.

    பெரியாரின் பூமியில் சாதி, மத ஆதிக்கத்திற்கு இடம் அளிக்கக்கூடாது. சமூக நீதியை பாதுகாக்க கருணாநிதியின் துணிச்சல் ஸ்டாலினுக்கும் வேண்டும். மாநில சுயாட்சிக்கான அடுத்தகட்ட நகர்வை ஸ்டாலின் முன்எடுக்க வேண்டும். தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களை நிறுவிய கருணாநிதிக்கு அவரது பெயரில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும். வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் ஸ்டாலின் அதனை அமல்படுத்த வேண்டும்.

    ஜி.கே.வாசன்:

    தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் முதல்அமைச்சராகவும், நீண்ட காலம் எதிர்கட்சி தலைவராகவும் இருந்தவரும் கருணாநிதி தான். தேர்தலில் தி.மு.க. தோல்வி கண்ட போதும், எந்த தேர்தலிலும் கருணாநிதி தோல்வி கண்டது கிடையாது. எல்லா மாநிலங்களும் டெல்லியை நோக்கி பார்க்கிறது.

    ஆனால் டெல்லியை தமிழகம் நோக்கி திரும்ப செய்தது காமராஜரும், கருணாநிதியும் தான். சென்னையை அரசியல் தலைநகரமாக கருணாநிதி மாற்றினார். அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..

    அப்துல் சமது:

    கருணாநிதி இளைஞர்களுக்கு ஊக்க சக்தியாக திகழ்ந்தார். ஓய்வறியாமல் உழைத்தார். 2006ம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு அவர் ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் கூறியது போல், முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கினார். முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் தந்தார். தற்போது அந்த நிலை மாறி உள்ளது. எனவே மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் முஸ்லிம்களுக்கு அந்த பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    இந்த கூட்டத்தில், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.தேவர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், உள்பட பலர் பேசினர். #Karunanidhi #MKStalin #DMK
    Next Story
    ×