search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா வெள்ள சேதத்துக்கு தமிழகம் காரணமில்லை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
    X

    கேரளா வெள்ள சேதத்துக்கு தமிழகம் காரணமில்லை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

    கேரளா வெள்ள சேதத்துக்கு தமிழகம் காரணமில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalaniswami #Keralaflood

    திருச்சி:

    கேரளாவில் இந்த ஆண்டு வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் அந்த மாநிலமே வெள்ளக்காடாக மாறியது. 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    இந்தநிலையில் முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை குறைக்கக் கோரிய வழக்கில், கேரள அரசின் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் அணையில் இருந்து திடீரென்று அதிக அளவில் தண்ணீரை தமிழகம் திறந்து விட்டதும் வெள்ளசேதம் ஏற்பட்டதற்கு ஒரு காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கேரளா தவறான குற்றச்சாட்டை கூறுவதாக தெரிவித்துள்ளார்.

    திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை இன்று பார்வையிட்ட அவர் இது தொடர்பாக கூறியதாவது:-


     

    முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தான் கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு தவறானது. நாம் ஒரு இடத்தில் தான் தண்ணீர் திறந்துள்ளோம். ஒரு இடத்தில் இருந்து வந்த தண்ணீரால் வெள்ளம் ஏற்பட்டது என்பது தவறு. அங்குள்ள 80 அணைகளில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் அனைத்து பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

    முல்லை பெரியாறு அணையினை 152 அடியாக உயர்த்தக்கூடாது என்பதற்காக பரப்பப்படும் தவறான கருத்தினை கூறி வருகின்றனர். 1 மாதத்திற்கு முன்பு கூட நிபுணர்கள் குழு அங்கு வந்து ஆய்வு செய்தது. தமிழக நீர் வளத்துறை முதன்மை செயலாளர் கூட உடனிருந்தார். அப்போது அணை உறுதியாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது எனவும், 142 அடி நீரை தேக்கலாம் எனவும் நிபுணர்கள் குழு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

    அந்த ஆய்வு முடிந்த 20 நாட்களுக்கு பின்னர் தான் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த பகுதிகளில் மட்டும் வந்திருந்தது என்றால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பல்வேறு பகுதிகளில் வந்தது எப்படி வெள்ளத்திற்கு காரணமாகும். அந்தந்த பகுதி அணைகளில் தண்ணீரை தேக்க முடியாமல் உபரியாக வெளியேற்றியதால் தான் வெள்ளம் ஏற்பட்டது.

    வெள்ளம் பாதித்த ஒரு வாரத்திற்கு பின்னர் தான் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதுவும் முழுவதும் திறக்கப்படாமல் 3 முறை அறிவிப்பு வெளியிடப்பட்டு திறக்கப்பட்டது. அதாவது 139 அடியில் ஒரு அறிவிப்பு, 141 அடியில் ஒரு அறிவிப்பு, 142 அடியில் ஒரு அறிவிப்பு என படிப்படியாக தான் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த பகுதி இல்லாமல் கேராளவில் அனைத்து பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கேரள அரசின் குற்றச்சாட்டினை ஏற்றுக்கொள்ள முடியாது.

    திருச்சி கொள்ளிடம் பாலம் பழுதடைந்த பாலம். அது ஏற்கனவே பயன்பாட்டிற்காக தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் புதிய பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.

    கைவிடப்பட்ட ஒரு பாலம் வலுவிலந்து உடைந்துள்ளது. அதனை எப்படி சீர் செய்ய முடியும். போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்ட பாலத்தினை அத்துமீறி தான் சிலர் பயன்படுத்தி வந்தனர்.

    நாகை அளக்குடி, கொள்ளிடம் மதகுகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாளுக்கு பிறகு தண்ணீர் வருவதால் தான் இந்த பாதிப்பு. ஒவ்வொரு முறை தண்ணீர் வரும் போதும் உடைப்பு ஏற்படும். வெள்ளம் திடீரென அதிக அளவில் வந்தது உடைப்பிற்கு காரணம். மக்களையும், விவசாயிகளையும் காப்பாற்றும் வகையில் இந்த அரசு பாதுகாப்பான வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×