search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் சூப்பிரண்டு செக்ஸ் புகார்- போலீஸ் அதிகாரிகள் குழு விசாரணை நாளை தொடக்கம்
    X

    பெண் சூப்பிரண்டு செக்ஸ் புகார்- போலீஸ் அதிகாரிகள் குழு விசாரணை நாளை தொடக்கம்

    ஐ.ஜி. மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்துள்ள செக்ஸ் புகார் குறித்து நாளை போலீஸ் அதிகாரிகள் குழு விசாரிக்க உள்ளது. #Vishakacommittee
    சென்னை:

    தமிழக காவல் துறையில் பெண் அதிகாரி ஒருவர் சென்னையில் முக்கிய பிரிவு ஒன்றில் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தார்.

    அவருக்கு உயர் அதிகாரியாக ஐ.ஜி. அந்தஸ்தில் ஆண் போலீஸ் அதிகாரி இருக்கிறார்.

    ஒரே பிரிவில் இருந்ததால் அந்த ஐ.ஜி. அடிக்கடி பெண் போலீஸ் சூப்பிரண்டை அழைத்து வழக்குகள் தொடர்பாக பேசுவதுண்டு. நாளடைவில் அந்த பெண் போலீஸ் சூப்பிரண்டு மீது ஐ.ஜி.க்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

    சுமார் 7 மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் அவர் தனது ஆசையை மறைமுகமாக வெளிப்படுத்தினார். இதற்கு பெண் போலீஸ் சூப்பிரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    என்றாலும் ஐ.ஜி. தொடர்ந்து பெண் போலீஸ் சூப்பிரண்டிடம் செக்ஸ் ரீதியிலான முயற்சிகளை கையாண்டதாக தெரிகிறது. பல தடவை பாராட்டுவதாக கூறி அவர் கட்டிப்பிடிக்க முயற்சி செய்தாராம்.

    ஒரு தடவை ஒரு வழக்கு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று பெண் சூப்பிரண்டை அவர் தனது அறைக்கு அழைத்திருந்தாராம். அப்போது அவர் தனது செல்போனில் ஆபாச படத்தை காட்டினாராம்.

    ஒரு கட்டத்தில் தனது ஆசைக்கு அடிபணியாததால் அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஐ.ஜி. இறங்கியதாக தெரிகிறது. அதாவது அந்த பெண் சூப்பிரண்டிடம் “உன்னைப் பற்றிய ஆண்டு ரகசிய அறிக்கை (ஏ.சி.ஆர்.)யில் உனக்கு எதிராக குறிப்புகளை எழுதுவேன்” என்று ஐ.ஜி. அச்சுறுத்தும் வகையில் மிரட்டினாராம்.

    இதனால் என்ன செய்வது என்று தவித்த அந்த பெண் போலீஸ் சூப்பிரண்டு வேறு பிரிவுக்கு மாற்றலாகி சென்று விடலாம் என்று முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு உடனடி இடமாற்றம் எதுவும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் அந்த ஐ.ஜி. ஒருநாள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் முயற்சியில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இனியும் பொறுமையாக இருக்க கூடாது என்று முடிவு செய்த பெண் போலீஸ் சூப்பிரண்டு சமீபத்தில் போலீஸ் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரனை சந்தித்து முறையிட்டார்.

    அப்போது தனக்கு ஐ.ஜி. எந்தெந்த வகையில் செக்ஸ் தொந்தரவு கொடுத்தார் என்று டி.ஜி.பி.யிடம் பெண் போலீஸ் சூப்பிரண்டு விளக்கமாக எடுத்துக் கூறினார்.

    பெண் போலீஸ் சூப்பிரண்டு ஆதாரத்துடன் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை கண்டு டி.ஜி.பி. அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டார். அரசு அலுவலகங்களில் பெண் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாகா கமிட்டி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையிலான அந்த விசாகா கமிட்டியில் கூடுதல் டி.ஜி.பி. அருணாசலம், காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி, ஓய்வு பெற்ற கூடுதல் சூப்பிரண்டு சரஸ்வதி, டி.ஜி.பி. அலுவலக மூத்த அதிகாரி ரமேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    இந்த கமிட்டி ஐ.ஜி. மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்துள்ள புகாரை முதல் வழக்காக விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக காவல்துறையின் விசாக கமிட்டி நாளை (வியாழக்கிழமை) கூட உள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநில குற்ற ஆவணக் காப்பகம் கட்டிடத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கூடுதல் டி.ஜி.பி.சீமா அகர்வால் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

    கூட்டத்தில் பெண் போலீஸ் சூப்பிரண்டு அளித்த செக்ஸ் புகார் குறித்து விசாரணை தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில் பூர்வாங்க விசாரணைகள் நடந்து முடிந்து விட்டன. எனவே நாளைய தினம் விசாரணையின் அடுத்தக் கட்டம் தொடங்கப்பட உள்ளது.

    செக்ஸ் புகார் செய்த பெண் போலீஸ் சூப்பிரண்டிடம் விசாரணை நடத்த உள்ளனர் . அவரிடம் வாக்குமூலம் பெற முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்பிறகு குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் ஐ.ஜி.யிடமும் விசாரணை நடத்தப்படும். அவர்கள் சொல்லும் தகவலின் அடிப்படையில் விசாகா கமிட்டி இறுதி முடிவு எடுக்கும்.

    இந்த தகவல்களை விசாரணை கமிட்டி உறுப்பினர்களில் ஒருவர் தெரிவித்தார். விசாகா கமிட்டி யாருக்கும் சாதக பாதகம் இன்றி நியாயமான முடிவை எடுக்கும் என்றும் அந்த உறுப்பினர் கூறினார். எனவே செக்ஸ் புகாருக்கு ஆளாகி இருக்கும் ஐ.ஜி. மீது துறை ரீதியிலான நடவடிக்கை பாயுமா? என்ற பரபரப்பு தமிழக காவல்துறை வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.

    விசாக கமிட்டி விசாரணை நாளை தொடங்குவதையொட்டி பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்த செக்ஸ் புகாரில் உடனடி நடவடிக்கைகள் ஆரம்பமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் செக்ஸ் புகார் கூறிய பெண் அதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது பணிபுரிந்த இடத்தில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும் அவருக்கு சென்னையிலேயே பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நேற்று ஒரே நாளில் 16 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுடன் பெண் அதிகாரியும் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் செக்ஸ் புகார் சுமத்தப்பட்ட ஐ.ஜி. இடமாற்றம் செய்யப்படவில்லை. அவர் அதே பிரிவில் உள்ளார். #Vishakacommittee
    Next Story
    ×