search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லையில் இருந்து கேரளாவிற்கு ரெயில் மூலம் அனுப்பப்பட்ட 3.30 லட்சம் லிட்டர் தாமிரபரணி குடிநீர்
    X

    நெல்லையில் இருந்து கேரளாவிற்கு ரெயில் மூலம் அனுப்பப்பட்ட 3.30 லட்சம் லிட்டர் தாமிரபரணி குடிநீர்

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நெல்லையில் இருந்து ரெயில் மூலம் 3.30 லட்சம் லிட்டர் தாமிரபரணி குடிநீர் அனுப்பப்பட்டது. #KeralaFloods
    நெல்லை:

    கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையினால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏராளமான குடியிருப்புகளை வெள்ளம் மூழ்கடித்தது. பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் லட்சகணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு மத்திய-மாநில அரசுகள் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளன. மேலும் தமிழகம் முழுவதும் இருந்து தன்னார்வ அமைப்புகள், வணிகர் சங்கத்தினர், அரசியல் கட்சியினரும் நிவாரண பொருட்களை அனுப்பி வருகிறார்கள். பெட்ஷீட், பால் பவுடர், மருந்து பொருட்கள், குடிநீர் உள்ளிட்டவை அனுப்பப்பட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் ரெயில்வே நிர்வாகம் சார்பாக கேரள மக்களுக்கு ஏற்கனவே சென்னை, ஈரோடு, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகளில் சுத்திகரிக்கப்பட்ட தாமிரபரணி குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கண்டெய்னர்களுடன் சரக்கு ரெயில் நெல்லை ரெயில்நிலையத்திற்கு வந்தது. அதில் தலா 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 24 சின்டெக்ஸ் தொட்டிகள், தலா 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 18 தொட்டிகள் இருந்தன. அவற்றில் சுத்திகரிக்கப்பட்ட தாமிரபரணி குடிநீர் நிரப்பப்பட்டது.



    இதையடுத்து நேற்று மாலை சரக்கு ரெயில் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டது. அங்கிருந்து கோட்டயம், எர்ணாகுளம் பகுதிகளில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இதேபோல் கேரளாவில் ரெயில் பாதை மற்றும் சாலைகளில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பை சரிசெய்யவும், சாலைகளை சீரமைக்கவும் நெல்லையில் இருந்து சரக்கு ரெயில்கள் மூலமாக ஜல்லி கற்கள், மணல் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி தலா 50 டன் கொண்ட 26 லோடு மணல் திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்டு நெல்லையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

    மேலும் தலா 40 டன் எடை கொண்ட 36 லோடு ஜல்லிகற்கள் நெல்லை, மதுரை பகுதியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. இதுதொடர்பாக நெல்லை ரெயில்நிலைய மேலாளர் இளங்கோவன் கூறுகையில், ‘ரெயில் மூலமாக கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் அனுப்ப அரசு கட்டண விதிவிலக்கு அளித்துள்ளது. எனவே ரெயில்வே பார்சல் சேவை மூலமாக கேரளாவிற்கு நிவாரண பொருட்களை இலவசமாக அனுப்பலாம்’ என்றார். #KeralaFloods
    Next Story
    ×