search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 80 ஆயிரம் கன அடியாக சரிவு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 80 ஆயிரம் கன அடியாக சரிவு

    மேட்டூர் அணைக்கு நேற்று காலை 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து 80 ஆயிரம் கன அடியாக குறைந்தது. #Metturdam #Cauvery
    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்த கனமழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அந்த அணைகளில் இருந்து 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    இதனால் காவிரி ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

    இதேபோல சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் எடப்பாடி அருகே உள்ள தேவூர், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அந்த அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்தது. இதனால் அந்த அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. 2 அணைகளில் இருந்தும் இன்று காலை தண்ணீர் திறப்பு 97 ஆயிரத்து 858 கன அடியாக குறைக்கப்பட்டது.

    இதனால் காவிரியில் நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 1 லட்சத்து 60 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 1 லட்சம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கல்லில் தற்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    தொடர்ந்து பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து 80 ஆயிரம் கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து நேற்று 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பு 50 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

    அணையின் நீர்மட்டம் 119.25 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறையும் என்பதால் தண்ணீர் திறப்பும் குறைய வாய்ப்பு உள்ளது.

    இதனால் காவிரியில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது.

    மேட்டூரில் இருந்து எடப்பாடி செல்லும் சாலையில் மேட்டூர் அருகே கடந்த 5 நாட்களாக சாலையில் தண்ணீர் தேங்கி இருந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. மேட்டூரில் இருந்து எடப்பாடிக்கு செல்லும் வாகனங்கள் ஜலகண்டாபுரம் வழியாக இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் அந்த சாலையில் தண்ணீர் வடிந்ததால் இன்று காலை முதல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #Metturdam #Cauvery

    Next Story
    ×