search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் ரெயில்வே பாலத்திற்கும் ஆபத்தா? அதிகாரிகள் ஆய்வு
    X

    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் ரெயில்வே பாலத்திற்கும் ஆபத்தா? அதிகாரிகள் ஆய்வு

    கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 50ஆயிரம் கனஅடி நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ரெயில்வே பாலத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    திருச்சி:

    கர்நாடகத்தில் இருந்து மேட்டூர் அணைக்கு வினாடிக்கு சுமார் 2 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.

    முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் சுமார் 65 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கொள்ளிடத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை சமாளிக்க முடியாமல் பழைய இரும்பு பாலத்தை தாங்கி நின்ற 2 தூண்களில் விரிசல் ஏற்பட்டது. அந்த தூண்கள் ஆற்றுக்குள் இறங்கியதால் பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தின் இடிந்த பகுதிகளை தண்ணீர் அடித்து சென்றுவிட்டது.

    இடிந்து விழுந்த பாலத்தின் அருகிலேயே கொள்ளிடம் ஆற்றில் ஏற்கனவே கட்டப்பட்ட புதிய பாலம் பயன்பாட்டில் இருப்பதால் வாகன போக்குவரத்துக்கோ, பொது மக்களுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை.

    திருச்சியை பொறுத்தவரை காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அமைக்கப்பட்டுள்ள ரெயில்வே பாலங்களின் வழியாகத்தான் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    திருச்சி-சென்னை ரெயில் மார்க்கத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே இரண்டு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஒரு பாலம் மிகவும் பழமையானதாகும். இன்னொரு பாலம் இரு வழிப்பாதை அமைக்கும் பணியின்போது கட்டப்பட்ட புதிய பாலமாகும்.

    கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதாலும், ஏற்கனவே வாகனங்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு பாலத்தின் தூண்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்து இருப்பதாலும் ரெயில்வே அதிகாரிகள் உஷார் அடைந்துள்ளனர். இதற்காக கொள்ளிடம் ரெயில்வே பாலங்களின் இரு பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் பணியாளர்களை நியமித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் இந்த பாலங்களின் வழியாக செல்லும் ரெயில்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க தண்டவாளம் தகுதியாக உள்ளதா? என்பதை அறிவதற்காக நேற்று ஆய்வு பணிகள் நடைபெற்றது. இதற்காக கொண்டு வரப்பட்ட ராட்சத எந்திரத்தின் உதவியுடன் நேற்று மாலை கொள்ளிடத்தின் இரண்டு ரெயில்வே பாலங்களிலும் பொறியியல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    வெள்ளப்பெருக்கினால் ரெயில்வே பாலத்திற்கு எந்தவித ஆபத்தும் இல்லை. தொடர்ந்து இதுபோன்ற ஆய்வு காவிரி பாலத்திலும் நடைபெறும் என ரெயில்வே அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×