search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டும் காட்சி.
    X
    திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டும் காட்சி.

    நீர்வரத்து அதிகரிப்பால் பெருஞ்சாணி அணையில் இருந்து மீண்டும் 1000 கன அடி நீர் திறப்பு

    நீர்வரத்து அதிகரிப்பால் பெருஞ்சாணி அணையில் இருந்து காலை 10 மணிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. #perunchanidam
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதன் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    பெருஞ்சாணி அணை நிரம்பியதால் அங்கிருந்து 30 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் புகுந்தது.

    மழை குறைந்ததை தொடர்ந்து அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதனால் மாமுகம், இஞ்சிக்கடவு, மங்காடு, ஏழூர், வைக்கலூர் பகுதிகளில் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் வடியத் தொடங்கி உள்ளது. வைக்கலூர் பகுதியில் வாழைத் தோட்டங்களை சூழ்ந்த மழை வெள்ளம் வடியாமல் உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    தெரிசனங்கோப்பு, ஞாலம், அருமநல்லூர் போன்ற பகுதிகளில் மழை வெள்ளத்தில் நெல், வாழை பயிர்கள் மூழ்கின. தற்போது அங்கும் வெள்ளம் வடியத் தொடங்கி உள்ளது.

    ஏற்கனவே மழை காரணமாக சுமார் 125 வீடுகள் இடிந்து விழுந்தன. இவர்களுக்கும் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் நேற்று நிவாரண உதவிகளை வழங்கினார்கள். தொடர்ந்து பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களில் 11 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இதனால் வீடுகளை இழந்த பொது மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    மழை வெள்ளத்தால் இடிந்த வீடுகள், பயிர் சேதங்களை வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல மழையால் சேதம் அடைந்த மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்கும் பணிகளும் தீவிரம் அடைந்துள்ளது.

    பெருஞ்சாணி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால் நேற்று அந்த அணை மூடப்பட்டது. இந்தநிலையில் இன்று காலை பெருஞ்சாணி அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. வினாடிக்கு 1454 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 77 அடி கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 75 அடியானது.

    இதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு பெருஞ்சாணி அணை மீண்டும் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பரளியாறு, வள்ளியாறு, கோதையாறு, குழித்துறையாறுகளில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெள்ளம் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது.

    இதேபோல பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளில் இருந்து 4 ஆயிரத்து 688 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  #perunchanidam

    Next Story
    ×