search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரிடியம் என கொடுக்கப்பட்ட பாத்திரம்.
    X
    இரிடியம் என கொடுக்கப்பட்ட பாத்திரம்.

    கொடைக்கானலில் இரிடியம் தருவதாக ரூ.1 கோடி மோசடி

    கொடைக்கானலில் இரிடியம் தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்தவர் டோமினிக் (வயது45). இவர் பெங்களூரில் வட்டிக்கடை தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் விக்ரம் (42).

    இவர்களிடம் கொடைக்கானலை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தன்னிடம் மருத்துவ குணம் கொண்ட இரிடியம் இருப்பதாகவும் அதன் மூலம் அனைத்து வகை நோய்களையும் சரிசெய்ய முடியும் எனவும் கூறி உள்ளனர். அதற்கு ரூ. 1 கோடி விலை பேசி உள்ளார்.

    அதனை நம்பி டோமினிக் மற்றும் விக்ரம் ஆகிய 2 பேரும் ஒரு காரில் கொடைக்கானல் வந்துள்ளனர். காரை பசுபதி பாளையத்தை சேர்ந்த சம்மந்தம் (42) என்பவர் ஓட்டி வந்துள்ளார். கொடைக்கானல் வந்ததும் மகேந்திரனிடம் தொடர்பு கொண்டு பேசியபோது மன்னவனூர் அருகில் உள்ள பூம்பாறைக்கு வருமாறு கூறி உள்ளார்.

    அவர்கள் அங்கு சென்றபோது பேக்கிங் செய்யப்பட்ட ஒரு பெட்டியை கொடுத்து விட்டு இதில் இரிடியம் இருப்பதாகவும் இதனை ஊரில் சென்று பிரித்து பார்க்குமாறும் கூறி உள்ளார்.

    அவர்கள் கொடைக்கானல் வந்து பார்த்தபோது அந்த பெட்டியில் கரி பூசப்பட்ட செப்பு பாத்திரம் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்கள் 3 பேரும் மீண்டும் பூம்பாறைக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதனால் கொடைக்கானலிலேயே மகேந்திரனை தேடி வந்தனர்.

    அவர்களது கார் அடிக்கடி சென்று வந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் காரை மடக்கி விசாரணை நடத்தினர். அதில் நடந்த விபரத்தை போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதனையடுத்து பணம் மோசடி செய்த மகேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர். கொடைக்கானலில் இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

    வெளியூர்களை சேர்ந்த நபர்களை இரிடியம் தருவதாக கூறி இங்கு வரவழைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விடும் கும்பல் குறித்து போலீசாருக்கு பல புகார்கள் வந்துள்ளன. ஆனால் போலீசார் ஒருவரைக்கூட கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    Next Story
    ×