search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் இருந்து கார்கில் போருக்கு உத்தரவிட்ட வாஜ்பாய்
    X

    புதுவையில் இருந்து கார்கில் போருக்கு உத்தரவிட்ட வாஜ்பாய்

    புதுவையில் இருந்து கார்கில் போருக்கு உத்தரவிட்ட பிரதமர் வாஜ்பாய் எடுத்த அதிரடி நடவடிக்கையால் இந்தியாவிடம் பாகிஸ்தான் சரியான பாடம் கற்றுக்கொண்டது. #AtalBihariVajpayee
    புதுச்சேரி:

    வாஜ்பாய் 1999-ல் பிரதமராக இருந்த போது, கார்கில் போர் நடந்தது. அந்த போரில் இந்தியா மாபெரும் வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டியது. இந்தியாவின் அந்த சாதனைக்கு சொந்தக்காரர் வாஜ்பாய்.

    இந்தியாவில் காஷ்மீரில் சில பகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அப்போதைய பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த மு‌ஷரப் கார்கில் பகுதியில் ரகசியமாக படைகளை ஊடுருவ செய்தார்.

    இது, இந்திய ராணுவத்துக்கு தெரியாது. மே 3-ந் தேதி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஊடுருவி இருப்பதை ஆடு மேய்ப்பவர்கள் பார்த்து விட்டு இந்திய ராணுவத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    மே 5-ந் தேதி இது, உண்மைதானா? என்பதை கண்டறிவதற்காக 5 ராணுவ வீரர்கள் அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டனர். அவர்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடித்து சித்ரவதை செய்து கொன்றனர்.

    இதன் பின்னர் மேலும் ஆய்வு செய்த போது, பாகிஸ்தான் வீரர்கள் கார்கிலில் உள்ள டராஸ், காக்சர், முஷ்கோக் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் புகுந்திருப்பது தெரிய வந்தது.

    அப்போது பிரதமர் வாஜ்பாய் தலைநகரத்தில் இல்லை. அவர் புதுவைக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்திருந்தார். இங்கு கவர்னர் மாளிகையில் தங்கி இருந்தார்.

    டெல்லியில் இருந்து அவருக்கு பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி இருப்பதை உறுதி செய்து தகவல் வந்தது.

    உடனே பிரதமர் வாஜ்பாய் உறுதியான நடவடிக்கைகளை தொடங்கினார். எந்த தயக்கத்தையும் காட்டாத அவர், பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று உடனடி முடிவுக்கு வந்தார்.

    அவர் புதுவையில் இருந்தபடியே போர் உத்தரவை பிறப்பித்தார். அடுத்த வினாடி இந்திய விமானப் படைகள் தாக்குதலை தொடங்கின.

    அடுத்து டெல்லிக்கு உடனடியாக சென்ற பிரதமர் போர் நடவடிக்கைகளை தீவிரமாக்கினார்.

    தொடர்ந்து தரைப்படைகளும் நேரடியாக சென்று எதிரிகளை எதிர்கொண்டது. கடுமையான போர் நடந்தது.

    வாஜ்பாய் காட்டிய துணிச்சலால் இந்திய ராணுவம் பாகிஸ்தான் படைகளை துவம்சம் செய்தது. இதனால் பாகிஸ்தான் படைகள் பின்வாங்கி ஓடின.



    ஜூலை 26-ந் தேதி போர் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. சுமார் 4 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

    அன்று பிரதமர் வாஜ்பாய் எடுத்த அதிரடி நடவடிக்கையால் இந்தியாவிடம் பாகிஸ்தான் சரியான பாடம் கற்றுக்கொண்டது. #AtalBihariVajpayee

    Next Story
    ×