search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளப்பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ராமதாஸ்
    X

    வெள்ளப்பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ராமதாஸ்

    மழை, வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். #PMK #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கேரளமும், கர்நாடகத்தின் சில மாவட்டங்களும் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றன. அம்மாநிலங்களில் பெய்து வரும் மழையால் தமிழக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து தமிழகத்திலும் பல மாவட்டங்களில் நிலைமை மோசமாகி வருகிறது. இதைத் தடுப்பதற்கான அரசின் நடவடிக்கைகள் போதுமானவையல்ல.

    கேரளத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் அம்மாநிலத்தின் பெரும் பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கேரள மழை-வெள்ளத்துக்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலையில் மட்டும் 7 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து மழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70-ஐ தாண்டியுள்ளது.

    அதேபோல், கேரளத்தையொட்டியுள்ள கர்நாடகப் பகுதிகளில் கொட்டும் மழை காரணமாக அங்கு காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் நிரம்பி வழிவதால் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.

    இதனால் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மற்றும் கடலூர் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. காவிரியின் துணை ஆறுகளில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடிக்கும் கூடுதலாக திறந்து விடப்படுவதன் காரணமாக ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் பல கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

    கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல இடங்களில் குடிசைகளும், பயிர்களும் மூழ்கி மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இரு மாவட்டங்களிலும் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளன. வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

    தமிழகத்தில் கன்னியா குமரி, தூத்துக்குடி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.

    கர்நாடகத்திலிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் காரணமாகவே தமிழகத்தில் கரையோர மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பலத்த மழை பெய்யும் மாவட்டங்களில் நிலைமை நிமிடத்திற்கு நிமிடம் மோசமாகி வருகிறது. நீலகிரி, வால்பாறை பகுதிகளில் கொட்டும் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    தமிழக மாவட்டங்களைப் பொறுத்தவரை இதுவரை நிலைமை கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த நாட்களில் கேரளம் மற்றும் கர்நாடகத்தில் மழை அதிகரிக்கும் என்பதால் தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படலாம். அவ்வாறு திறக்கப்பட்டால் காவிரி மற்றும் கொள்ளிடம் வினாடிக்கு 3 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்து விட வேண்டிய நிலைமை ஏற்படலாம்.

    வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பலத்த மழை பெய்தால் அதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். அத்தகைய சூழலை சமாளிக்க இப்போதே போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்படலாம்.

    தமிழகத்தில் காவிரிக் கரையோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவிரிக் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுதல், வெள்ளப் பகுதிகளுக்கு பார்வையாளர்கள் செல்லாமல் தடுத்தல் உள்ளிட்ட பணிகளை மட்டும் தான் இந்த குழுக்கள் செய்கின்றனவே தவிர, தொலைநோக்குப் பார்வையுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையோ, பாதுகாப்புப் பணிகளையோ செய்யவில்லை.

    தமிழகத்திலுள்ள காவிரி உள்ளிட்ட ஆறுகளில் எவ் வளவு தண்ணீர் வந்தாலும் அதை சமாளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். கரைகளில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், உடைப்பு ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருத்தல், நீர் செல்லும் பாதைகளில் அடைப்புகளை சரி செய் தல் உள்ளிட்ட பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

    கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரு வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஆட்சியாளர் களின் தவறுகள் தான் காரணமாகும். அதேபோன்ற நிலைமை மீண்டும் ஏற்பட் டால் அதை தமிழக அர சாலும், தமிழ்நாட்டு மக்க ளாலும் தாங்கிக் கொள்ளவே முடியாது.

    எனவே, மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மத்திய துணை ராணுவப் படைகளை முன்கூட்டியே அழைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #PMK #Ramadoss
    Next Story
    ×