search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயனூர் கதவணைக்கு 1 லட்சத்து 42 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரத்து
    X

    மாயனூர் கதவணைக்கு 1 லட்சத்து 42 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரத்து

    மேட்டூர் அணை தண்ணீருடன் பவானிசாகர் அணை நீரும் ஒன்று சேர்ந்து வருவதால் மாயனூர் கதவணைக்கு வரும் நீர்வரத்து அளவானது 1 லட்சத்து 42 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
    லாலாப்பேட்டை:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை முற்றிலும் நிரம்பியது. இதையடுத்து அங்கிருந்து திருச்சி முக்கொம்பு அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    பரந்து விரிந்த அணை என்பதால் தண்ணீர் முழுவதும் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. அதனை காண தினமும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் கரூர் மாவட்ட விவசாயிகள் சாகுபடி பணியை தொடங்கினர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மாயனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது. மாயனூர் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது.

    மேலும் கரையோர பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வயல்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.


    இந்த நிலையில் நேற்று மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்தனர்.

    கலெக்டர் அன்பழகன் மாயனூர் மற்றும் கரூர் மாவட்ட காவிரி கரையோர பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிட்டார். தண்டோரா மூலமும் வெள்ள அபாயம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று மாலை மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கூடுதல் தண்ணீர் இன்று அதிகாலை மாயனூர் கதவணையை வந்தடைந்தது. இது மட்டுமின்றி ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 40,000 ஆயிரம் கனஅடி தண்ணீரும், அமராவதி ஆற்றில் இருந்து திறந்து விடப்பட்ட 15,000 கன அடி தண்ணீரும் கரூர் மாவட்டம் திருமுக்கூடலூர் அருகே காவிரி ஆற்றில் கலந்தன. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவானது 1.42 லட்சம் கனஅடியாக இருந்தது. அந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. மாயனூர் கதவணையில் மொத்தம் 98 கதவுகள் உள்ளது. இதில் 78 கதவுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த தண்ணீர் இன்று மதியம் மாயனூர் கதவணையை வந்தடைய வாய்ப்புள்ளது. எனவே தண்ணீர் செல்வதற்கு வசதியாக மீதமுள்ள கதவுகளும் திறக்கப்பட உள்ளது.

    இதன் மூலம் இன்று மதியத்திற்கு மேல் மாயனூர் கதவணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 1.50 லட்சம் கன அடியை தாண்டும். எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை, தீயணைப்பு துறையினர் கரையோர பகுதியில் முகாமிட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கரூர் மாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றில் 1 லட்சத்து 42 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக என்.புகழூர் ஊராட்சிக்கு உட்பட்ட தவுட்டுப்பாளையம் கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

    இதனால் அங்குள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. முன்னெச்சரிக்கையாக அங்கு வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டு தவுட்டுப்பாளையத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அத்துடன் அங்கு நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. தொடர்ந்து மாயனூர் கதவணை பகுதியில் 1 லட்சத்து 42 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் செல்வதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ யாரும் முயற்சிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து தண்டோரா மூலம் எச்சரிக்கப்பட்டு வருகிறது.


    கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அணைக்கரை கீழணை நிரம்பியது. இன்று காலை நிலவரப்படி கீழணைக்கு 61,534 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதில் கொள்ளிடம் ஆற்றில் 59,906 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

    கீழணையில் இருந்து வடவாற்றில் 978 கன அடி தண்ணீரும், வடக்கு ராஜன் வாய்க்காலில் 191 கன அடி தண்ணீரும், தெற்கு ராஜன் வாய்க்காலில் 395 கன அடி தண்ணீரும், குமிக்கி மண் ஆற்றில் 109 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் கீழணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கரையோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் கொள்ளிடம் ஆற்றின் இருகரைகளையும் தொட்டு செல்கிறது. தற்போது ஆற்றில் வெள்ள நீர் அதிக அளவில் செல்வதால் திருமானூர் பகுதியில் திருவெங்கனூர், விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி, ஏலாக்குறிச்சி, அழகிய மணவாளன், நதியனூர், தூத்தூர் போன்ற கொள்ளிட கரையோர கிராமங்களில் உள்ள செங்கல் சூளைகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் அங்கு தண்ணீருக்காக அமைக்கப்பட்ட போர் வெல்கள், அங்குள்ள டீசல் என்ஜின்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

    புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கல்லணையில் இருந்து கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் இன்று புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பகுதியான மேற்பனைக்காடு, நாகுடியை சென்றடைந்துள்ளது.
    Next Story
    ×