search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் 3-வது நாளாக வெள்ளம்
    X

    குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் 3-வது நாளாக வெள்ளம்

    மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் இன்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று 3-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. #CoutrallamFalls
    தென்காசி:

    குற்றால அருவிகளில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி அதன் முன்புறம் உள்ள பாலம் வரை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    ஐந்தருவியிலும் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் கொட்டியது. இதனால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க நேற்று 2-வது நாளாக தடை நீடித்தது.

    புலியருவியில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் அங்கும் நேற்று குளிக்க தடை விதிக்கப்பட்டது. சிற்றருவியில் மட்டும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    நேற்று மாலை பலத்த மழையுடன் சூறாவளி காற்று வீசியது. இதையடுத்து குற்றாலம்-தென்காசி சாலையில் பெண்கள் கல்லூரி அருகில் பழமையான மருதமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் வந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் வந்து போக்குவரத்தை சீரமைத்தனர்.

    இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் இன்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து இன்று 3-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று தென்காசி, குற்றாலம் பகுதியில் சற்று மழை குறைந்துள்ளது.

    இதேபோல் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் 3-வது நாளாக ஆக்ரோ‌ஷமாக கொட்டுகிறது. இதையடுத்து 3-வது நாளாக இன்று மணிமுத்தாறு அருவியிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.  #CoutrallamFalls

    Next Story
    ×