search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் கன மழை நீடிப்பு - தமிழக வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்
    X

    கேரளாவில் கன மழை நீடிப்பு - தமிழக வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்

    கேரளாவில் கன மழை நீடித்து வருவதால் தமிழக வாகனங்கள் முந்தல் சோதனைச் சாவடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் கன மழை கொட்டி வருகிறது. இதனால் இடுக்கி, வயநாடு உள்பட பல்வேறு மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    37-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் மீண்டும் தொடர் மழை நீடித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் வாகனங்கள் போடி அருகில் உள்ள முந்தல் சோதனைச் சாவடியில் திருப்பி விடப்படுகின்றன.

    தோட்ட தொழிலாளர்கள் போடி அருகில் உள்ள சிலமலை, சில்லமரத்துப்பட்டி, ராசிங்காபுரம், மீனாட்சிபுரம், ஓடைப்பட்டி உள்பட 31 கிராமங்களில் இருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் கேரளாவிற்கு செல்கின்றனர்.

    இவர்கள் போடி மெட்டு வழியாக அடிமாலி, இடுக்கி, பூப்பாறை, பேத்தொட்டி, சாந்தாம்பாறை, ஆனையிறங்கி அணை, மூணாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர்.

    அதிகாலையில் பணிக்கு செல்லும் இவர்கள் மாலையில் ஜீப் மூலம் மலைச்சாலையில் வீடு திரும்புவார்கள். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாலும் கன மழை நீடித்து வருவதாலும் தோட்ட தொழிலாளர்கள் யாரும் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் முந்தல் சோதனைச்சாவடியில் இன்று முதல் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் வாகங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் 4 நாட்கள் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அதுவரை தொழிலாளர்கள் பணிக்கு வரவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×