search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
    X

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு

    வீராணம் ஏரியில் இருந்து இன்று காலை சென்னைக்கு 66 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது நேற்றை விட 11 கனஅடி அதிகமாகும். #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக வீராணம் ஏரி விளங்குகிறது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அங்கிருந்து கல்லணைக்கு வந்த தண்ணீர் கீழணைக்கு திறந்து விடப்பட்டது. பின்னர் வடவாறு வழியாக 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 900 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று அது 800 கனஅடியாக குறைந்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.70 அடியாக இருந்தது. இன்றும் நீர்மட்டம் அதே அடியாக உள்ளது. தற்போது ஏரி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    நீர்வரத்து அதிகமாக இருப்பதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி வீராணம் ஏரியின் கடைசி பகுதியான சேத்தியா தோப்பு அடுத்த பூதங்குடியில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் நேற்று சென்னைக்கு வினாடிக்கு 55 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இன்று காலை வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு 66 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது நேற்றை விட 11 கனஅடி அதிகமாகும்.

    ஏரியின் நீர்மட்டத்தை பொறுத்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவு மாறுபடும்.

    ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக 850 கனஅடி உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது. இதனை சேமிக்கும் வகையில் சேத்தியாதோப்பு அணைக்கட்டில் இருந்து வெள்ளைராஜன் வாய்க்கால் வழியாக வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வாலாஜா ஏரிக்கு திறந்து விடப்பட்டது. பின்னர் பெருமாள் ஏரியை நிரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. கிளை வாய்க்கால்களை விவசாயிகள் தூர்வாரி வருகின்றனர். இந்த பணிகள் முடிந்த உடன் வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அந்த பணிகள் முடிந்த பின்னர் ஓரிரு நாட்களில் கிளை வாய்க்கால்கள் மூலம் உபரி நீர் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது. #VeeranamLake

    Next Story
    ×