search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் இரு கரைகளையும் தொட்டுச்செல்லும் காட்சி
    X
    திருச்சி கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் இரு கரைகளையும் தொட்டுச்செல்லும் காட்சி

    கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு - காவிரி கரையோர மக்கள் அதிரடியாக வெளியேற்றம்

    காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். #kollidamriver
    திருச்சி:

    காவிரியில் வெள்ள அபாயத்தை தடுக்க திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் நேற்று 2-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து காவிரி ஆற்றில் 1.30 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை உள்பட 12 மாவட்டங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டது. திருச்சியில் காவிரி கரையோரத்தில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் முன்னெச்சரிக்கையாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். கலெக்டர் ராசாமணி நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேட்டூர் அணையில் இருந்து ஏற்கனவே திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் திருச்சி காவிரி ஆற்றில் இருபுறமும் கரையை தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. தற்போது 1.30 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ள அபாயத்தை தடுக்கும் வகையில் முக்கொம்பு மேலணையில் இருந்து உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதையடுத்து முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 30,067 கனஅடி தண்ணீரும், கொள்ளிடம் ஆற்றில் 29,952 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த மாதம் (ஜூலை) 24-ந்தேதி கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பின் காவிரியில் தண்ணீர் குறைவாக வந்ததால் மேலணையில் இருந்து கொள்ளிடத்திற்கு உபரிநீர் திறப்பு கடந்த 31-ந்தேதி நிறுத்தப்பட்டது. இதனால் கொள்ளிடத்தில் தண்ணீர் ஓடை போல ஓடியது. மணல் திட்டுக்களும் தெரிய ஆரம்பித்தன. தற்போது மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றில் இருபுறமும் கரையை தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள 1.30 லட்சம் கன அடி தண்ணீர் இன்று இரவு திருச்சி முக்கொம்பு மேலணையை வந்தடையும். இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இரவு முதல் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் காரணமாக காவிரி, கொள்ளிடம் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    எனவே காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாகவும், கிராம ஊராட்சி செயலர் மூலமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    திருச்சி முக்கொம்பு, கம்பரசம்பேட்டை தடுப்பணை மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொட்டியம், முசிறி காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள கூடுதல் தண்ணீரால் காவிரியில் வரும் தண்ணீர் கிளை வாய்க்கால்களில் திறந்து விடப்படுகிறது. அதன்படி வாய்க்கால் மூலம் 75 ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்புவதற்கு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதுவரை 35 ஏரி, குளங்களில் 100 சதவீதம் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 ஏரி, குளங்களில் இன்னும் இரண்டு நாட்களில் முழுமையாக தண்ணீர் நிரப்பப்படும். ஏரி, குளங்களில் முழுமையாக தண்ணீர் நிரப்பப்படுவதால் 2 டி.எம்.சி. அளவிற்கு தண்ணீர் சேமித்து வைக்கப்படும். கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் ணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளிப்பதை படத்தில் காணலாம்

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் இன்று காலை நிலவரப்படி கரூர் மாவட்ட எல்லையான மாயனூர் கதவணைக்கு 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இன்று மதியம் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும். இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக மாயனூர், லாலாப்பேட்டை காவிரி கரையோர பகுதி மக்கள் வெளியேறுமாறு தண்டோரா மூலம் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். #kollidamriver
    Next Story
    ×