search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதந்திர தின விழா நடைபெறும் உப்பளம் மைதானம் மூடப்பட்டது
    X

    சுதந்திர தின விழா நடைபெறும் உப்பளம் மைதானம் மூடப்பட்டது

    பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலியால் சுதந்திர தின விழா நடைபெறும் உப்பளம் மைதானம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ##Independenceday

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி நாட்டின் 72-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.

    புதுவை அரசு சார்பில் உப்பளம் மைதானத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கொடியேற்றுகிறார். இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

    இதேபோல புதுவையிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரவு, பகலாக வாகனசோதனை, ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் விடுதிகளில் தங்கியிருப்பவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். விடுதியில் அறை எடுத்து தங்குபவர்களின் புகைப்படத்தை பதிவு செய்ய வேண்டும். சந்தேகப்படும் வகையில் செயல்படுபவர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தர வேண்டும் என விடுதி உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    முதல்-அமைச்சர், அமைச்சர்களின் வீடுகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வழக்கமாக சுதந்திர தினத்திற்கு 2 நாட்கள் முன்புதான் உப்பளம் மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும்.

    இதனால் 12-ந்தேதி வரை மைதானத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி, விளையாட்டு பயிற்சி மேற்கொள்வர். ஆனால், இந்த ஆண்டு நேற்றைய தினமே ஒத்திகை என்ற பெயரில் மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டது. இதனால் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

    மைதானம் மூடப்பட்டு இன்று முதல் 15-ந்தேதி வரை 5 நாட்கள் பொதுமக்களுக்கு மைதானத்திற்குள் நுழைய அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபடும் மாணவர்கள் மட்டும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் வழக்கமாக நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ரெயில்நிலையம், பஸ்நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். #Tamilnews

    Next Story
    ×