search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட 275 கட்டிடங்களுக்கு சீல்
    X

    நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட 275 கட்டிடங்களுக்கு சீல்

    நீலகிரி மாவட்டத்தில் யானை வழித் தடத்தில் உள்ள 275 கட்டிடங்களுக்கு நாளை சீல் வைக்கப்படுகிறது.#elephant

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் சீகூர் பள்ளத்தாக்கு பகுதியில் சீகூர் முதல் சிங்காரா வரையிலான 50 கி.மீ. தூரத்தில் யானைகள் வழித்தட நிலங்களாக கண்டறியப்பட்டுள்ள 6 ஆயிரம் ஏக்கர் வனப் பகுதியில் விதி முறைகளை மீறி குடியிருப்புக்கான அனுமதி பெற்று வணிக நோக்கத்தில் ரிசார்ட்டுகளை கட்டியது தெரிய வந்தது.

    இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் கடந்த 2008-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

    அப்போது யானைகள் வழி தட நிலங்களில் உள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது யானைகள் வழித் தட நிலம் தொடர்பான உண்மை நிலைமையும், அதில் உள்ள கட்டிடங்களின் தன்மை குறித்தும் நேரில் ஆய்வு செய்து ஆகஸ்டு 8-ந் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் யானைகள் வழித்தட நிலத்தில் 39 ரிசார்ட்டுகள் இருப்பதாகவும், அவற்றில் உணவகம், தங்கும் விடுதி உள்ளிட்ட தனித் தனியாக 309 கட்டிடங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 27 ரிசார்ட் வளாகங்களின் உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை. 12 ரிசார்ட் வளாகங்கள் சார்பில் பங்கேற்ற உரிமையாளர்கள் தங்களிடம் உரிய ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.

    இந்த ஆவணங்களை கலெக்டரிடம் காண்பித்து 48 மணி நேரத்துக்குள் சரி பார்த்து கொள்ள வேண்டும்.

    மீதி உள்ள 27 ரிசார்ட் வளாகங்களை 48 மணி நேரத்தில் பூட்டி சீல் வைக்க வேண்டும் எனவும், உரிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் மீதமுள்ள 12 ரிசார்ட் வளாகங்களுக்கும் சீல் வைக்க வேண்டும் என நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து 27 ரிசார்ட்டுகளில் உள்ள 275 கட்டடிடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது. இந்த ரிசார்ட் உரிமையாளர்களுக்கு நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. சில இடங்களில் அதிகாரிகள் ரிசார்ட்டுகளில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டி சென்றனர்.

    விடுதிகளில் உள்ள பொருட்களை எடுக்க ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. நாளை (ஞாயிற்றுக் கிழமை ) மதியம் முதல் 27 ரிசார்ட்டுகளுக்கும் சீல் வைக்கப்படுகிறது.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள ரிசார்டுகளின் பெயர் வருமாறு-

    பேர் மவுண்டன், இன்தி வைல்டு, புளுவேலி, கிளடன் பேரடைஸ், அவலாஞ்சி ரிசார்ட்ஸ், வெஸ்லி வுட் எஸ்டேட், பெல் மவுண்ட் ரிட்ரீட், சபாரி லேண்ட், மவுண்ட் வியூ பார்ம், கிங்ஸ் ரேஞ்ச் ரிசார்ட்,தீனதயாளன் ரிசார்ட், சாஜித்கான், ஹான் பில் கிளப், மவுண்ட் மிஸ்ட் ரிசார்ட், கிளன் வியூ ரிசார்ட், நிக்கேரா நீல்கிரீஸ், ஆன சோலை லாட்ஜ், எக்கோ கேம்ப், ஜெனிபர் பிரிசில்லா கிறிஸ்டி தாஸ், நிஜாமுதின், நார்தன் ஹே எஸ்டேட், தி வைல்டுஸ், வெஸ்டர்ன் பார்ம் ரிசார்ட், வைல்டு இன், வைல்டு அட்வெஞ்சர் பார்ம் ஹவுஸ்,எலிபென்ட் என்கிளைவ், தாமோதரன் ஆகியவை ஆகும்.

    இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும் போது, யானைகள் வழித் தட நிலத்தின் கீழ் சில கட்டிடங்கள் வராவிட்டாலும் தமிழ்நாடு தனியார் வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதால் அந்த சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என்றார். #elephant

    Next Story
    ×