search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்பட்டி அருகே மீன் குத்தகைதாரர் வெட்டி கொலை
    X

    செம்பட்டி அருகே மீன் குத்தகைதாரர் வெட்டி கொலை

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே மீன் குத்தகைதாரர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி போலீஸ் சரகம் சித்தையன்கோட்டையை அடுத்துள்ள நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). மீன் குத்தகைதாரர். இவர் இன்று காலை தனது உறவினர் வீடான சடையாண்டி என்பவர் வீட்டுக்கு சென்றார்.

    வீட்டு முன்பு சடையாண்டி மனைவி சித்ரா வாசலில் கோலம் போட்டுக் கொண்டு இருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் சடையாண்டியை திடீரென பாய்ந்து வெட்டினர்.

    அதிர்ச்சியடைந்த செல்வராஜ் அந்த கும்பல் வைத்திருந்த அரிவாளை பறிக்க முயன்றார். ஆத்திரமடைந்த அந்த கும்பல் செல்வராஜை சரமாரியாக வெட்டியது. இதில் அவருக்கு கழுத்து, முகம், கை பகுதிகளில் வெட்டு விழுந்ததால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதனை பார்த்ததும் 7 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள்களுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

    அதிகாலையில் இந்த சம்பவம் நடந்ததால் ஏராளமானோர் அங்கு திரண்டனர். வெட்டுக்காயமடைந்த சடையாண்டியை உடனடியாக தூக்கிக் கொண்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கொலை செய்யப்பட்ட செல்வராஜூக்கு லெட்சுமி என்ற மனைவியும், ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. மூத்த மகன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் நெல்லையில் போலீஸ்காரராக உள்ளார்.

    இது குறித்து செம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜை வெட்டிக் கொன்ற கும்பல் யார்? எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அதோடு தப்பிச் சென்ற கொலையாளிகளையும் தேடி வருகிறார்கள்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சடையாண்டி மனைவி சித்ரா கூறுகையில், வாசலில் நான் கோலம் போட்டுக் கொண்டு இருந்த போது எங்கள் உறவினரான அதிவீரபாண்டியன், அய்யப்பன் மற்றும் 5 பேர் வந்து இந்த செயலில் ஈடுபட்டுள்னர்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    Next Story
    ×