search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதை படத்தில் காணலாம்
    X
    திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதை படத்தில் காணலாம்

    குழித்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

    திற்பரப்பு அருவியில் சிறுவர் பூங்காவை தாண்டி வெள்ளம் கொட்டுவதால் அருவியில் குளிப்பதற்கு இன்று தடை விதிக்கப்பட்டு உள்ளது. #ThirparappuFalls
    நாகர்கோவில்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதை அடுத்து குமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    குமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் பரவலாக மழை பெய்தது. ஆரல்வாய் மொழி, நாகர்கோவில், பூதப்பாண்டி, சுருளோடு, முள்ளங்கினாவிளை, குளச்சல், ஆனைக்கிடங்கு பகுதிகளில் மழை பெய்தது. முள்ளங்கினாவிளையில் அதிகபட்சமாக 24 மி.மீ. மழை பதிவானது.

    திருவட்டார், குலசேகரம், கீரிப்பாறை, கொட்டாரம், மயிலாடி பகுதிகளில் இன்று காலையிலும் சாரல் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் விட்டு, விட்டு பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    48 அடி கொள்ளளவு கொண்டு பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 20.90 அடியாக இருந்தது. அணைக்கு 1459 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 762 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 75.50 அடியாக இருந்தது. அணைக்கு 936 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 385 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 16.50 அடியாக இருந்தது. அணைக்கு 237 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 500 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் நிரம்பி வருவதை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பெருஞ்சாணி அணைக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றுவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் குழித்துறை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

    கோதை ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சிறுவர் பூங்காவை தாண்டி வெள்ளம் கொட்டுவதால் அருவியில் குளிப்பதற்காக இன்று தடை விதிக்கப்பட்டு உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் திற்பரப்பு அருவியில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேதஅருள் சேகர் கூறுகையில், மழை நீடிக்கும் பட்சத்தில் பெருஞ்சாணி அணையில் இருந்து இன்று மாலை உபரிநீர் திறக்கப்படும். சிற்றாறு அணைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-13.6, பெருஞ்சாணி-9.2, சிற்றாறு 1-14.2, சிற்றாறு 2-12, புத்தன் அணை-10.4, முள்ளங்கினா விளை-24, கோழிப்போர் விளை-5, குருந்தன்கோடு-2, இரணியல்-3.2, பாலமோர்-10.4, ஆரல்வாய் மொழி-3, நாகர்கோவில்-1, பூதப்பாண்டி-8.2, சுருளோடு-12.4, கன்னிமார்-3.4, ஆனைக்கிடங்கு-2.2, குளச்சல்-18.4.   #ThirparappuFalls
    Next Story
    ×