search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான சுங்கத்துறை அதிகாரிகள் கோடிக்கணக்கில் சொத்துக்குவிப்பு - 3வது நாளாக சி.பி.ஐ. விசாரணை
    X

    கைதான சுங்கத்துறை அதிகாரிகள் கோடிக்கணக்கில் சொத்துக்குவிப்பு - 3வது நாளாக சி.பி.ஐ. விசாரணை

    சோதனையில் சிக்கிய ஆவணங்களை காட்டி அதிகாரிகள் மற்றும் கடத்தல் பயணிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். #TrichyAirport #CBIRaid
    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து தங்கம் கடத்தப்படுவதாக வந்த புகார்களை அடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் குழு விமானத்தில் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தியது.

    இதில் தங்க கடத்தலுக்கு சுங்கத்துறை அதிகாரிகளே உடந்தையாக இருப்பது தெரிய வந்தது. தங்கம் கடத்தி வருபவர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு கடத்தலுக்கு உதவி உள்ளனர்.

    சோதனையில் அதிகாரிகள் வாங்கிய லஞ்சப் பணம் ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகள் என 19 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    கடந்த 7 மாதங்களில் விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.14 கோடி மதிப்புள்ள 47 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காட்டியுள்ளனர். பிடிபட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பே ரூ.14 கோடி என்றால் கடந்த 7 மாதத்தில் பல நூறு கோடி ரூபாய் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வெளிநாட்டு மது, சிகரெட் ஆகியவை சுங்க இலாகா அதிகாரிகள் உதவியோடு கடத்தி வரப்பட்டிருக்கும் என சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தேகமடைந்துள்ளனர்.

    இதன் மூலம் பல வருடங்களாக சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தல் குருவிகள் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஒரு நாள் ஒன்றுக்கு கடத்தல் ஆசாமிகளிடம் இருந்து ரூ.10 லட்சம் முதல் 20 லட்சம் வரை லஞ்சமாக அதிகாரிகள் பெற்றுள்ளனர். மொத்தமாக பணத்தை சேர்த்து பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் தகுதிக்கேற்ப சதவீதம் அடிப்படையில் பிரித்துக்கொள்வார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.9 லட்சம் லஞ்சப் பணம் சுங்க இலாகா அதிகாரிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.

    நேற்று கைது செய்யப்பட்ட அதிகாரிகள், கடத்தல் பயணிகளின் வீடுகளிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடத்தல் தொழில் மூலம் கோடிக்கணக்கில் வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. சோதனையில் சிக்கிய ஆவணங்களை காட்டி அதிகாரிகள் மற்றும் கடத்தல் பயணிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விசாரணையின் முடிவில் சுங்க இலாகா துறை உயர் அதிகாரிகள் சிலரும் விமான நிலைய ஊழியர்கள் சிலரும் சிக்க உள்ளனர் என சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TrichyAirport #CBIRaid

    Next Story
    ×