search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டம்
    X

    சேலத்தில் 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டம்

    சேலத்தில் 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளதால் உளவுத்துறை போலீசார் 8 வழி சாலை அமையும் கிராம பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். #Greenwayroad #Farmersstruggle

    சேலம்:

    சேலத்தில் இருந்து சென்னைக்கு 277 கி.மீ. தூரத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள், வனப்பகுதிகள் கையகப்படுத்தப்படுகிறது. பல ஆயிரம் வீடுகள், பள்ளி கூடங்கள், 8 மலைகளும் உடைக்கப்படுகிறது.

    இதனால் பல ஆண்டுகளாக தங்களது வாழ்வாதாரங்களாக உள்ள விளை நிலங்களை கையகப்படுத்த விடமாட்டோம் என்று பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பின்னர் சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பை மீறி 36 கி.மீ. தூரத்திற்கு பசுமை வழி சாலை அமைப்பதற்கான நில அளவீடு ஜூன் மாதம் நிறைவு பெற்றது. 2-ம் கட்டமாக ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. தற்போது மண் பரிசோதனை மற்றும் மலையை குடைந்து சோதனை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதற்கிடையே 8 வழி சாலை திட்டத்தால் சேலம் மாவட்டத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரங்களை தமிழக விவசாய சங்கத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதில் பாதிக்கப்படும் விவசாயிகளும் பங்கேற்பதால் போராட்டம் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் யாராவது போராட்டத்தை தூண்டி விடுகிறார்களா? என்று உளவுத்துறையினர் மீண்டும் கிராமங்களில் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு அயோத்தியாப்பட்டினத்தில் உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்த போலீசார் மாலையில் விடுவித்தனர்.

    தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்பில் சேலத்தில் நேற்று மாலை நடைபெற இருந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    தடையை மீறி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாநில துணை தலைவர் இந்திரஜித் உள்பட 63 பேரை போலீசார் கைது செய்தனர். இரவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    சேலம்-சென்னை 8 வழி சாலைக்கு நிள அளவீடு பணிகள் நடந்த போது சேலத்தில் போராட்டம் தீவிரம் அடைந்தது. அப்போது போராட்டத்தை தூண்டியதாக சிலர் கைது செய்யப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீடு செய்யப்பட்டது. அதனால் போராட்டம் குறைந்தது.

    இந்தநிலையில் மீண்டும் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளதால் உளவுத்துறை போலீசார் 8 வழி சாலை அமையும் கிராம பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×