search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்- தினகரன்
    X

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்- தினகரன்

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அ.ம.மு.க பொருளாளர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், வக்கீல்கள் பிரிவு செயலாளர் சீனிவாசன், அண்ணா தொழிற்சங்க பேரவை இணைச்செயலாளர் சத்தியமூர்த்தி ,தேர்தல் பிரிவு துணை செயலாளர் மலர்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் வரவேற்றார்.

    கூட்டத்தில் 5 ஆயிரம் பேருக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ., வழங்கினார்.

    முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியை எதிர்த்து தி.மு.க. ஆட்சியை அகற்ற 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார். 40 ஆண்டுகளுக்கு பிறகு அதே சரித்திரம் திரும்பி உள்ளது. தற்போது நடைபெறும் ஆட்சி மக்களுக்கு அநீதியை உருவாக்கி உள்ளது.

    எம்.ஜி.ஆர். உருவாக்கிய, ஜெயலலிதா கட்டிக்காத்த அந்த இயக்கம் இன்று துரோகிகளிடம் உள்ளது. அதை நாம் மீட்டெடுப்போம். தேர்தல் எப்போது வந்தாலும் 200 தொகுதிகளுக்கு மேல் நாங்கள் வெற்றி பெறுவோம். நாங்கள் காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுவது இல்லை.

    முட்டை ஊழல், பருப்பு ஊழல், ரோடு ஒப்பந்த ஊழல் என அனைத்து துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது. டெல்டா மாவட்டங்களில் தூர் வார ஒதுக்கப்பட்ட ரூ.400 கோடியில் 10 கோடி கூட செலவழிக்கவில்லை. அதிலும் மெகா ஊழல் நடந்துள்ளது.

    இதற்கு காரணமான அனைவரும் பதில் சொல்லும் காலம் நெருங்கி விட்டது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வர உள்ளது. அப்போது சட்டசபையில் எங்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். அப்போது ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறை செல்வது உறுதி.

    ஜெயலலிதா ஆட்சி நடைபெறுவதாக கூறுகிறார்கள். அவர் கொண்டுவந்த திட்டங்களை இன்று பல மாநிலங்கள் செயல்படுத்துகின்றன. ஆனால் ஜெயலலிதா பெயரில் ஆட்சி நடத்துபவர்கள் மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அ.தி.மு.க.வின் 90 சதவீத தொண்டர்கள் எங்களிடம் தான் உள்ளனர்.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 41 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். ஆனால் நான் 20 ரூபாய் நோட்டை காட்டி ஓட்டு வாங்கியதாக கூறுகிறார்கள். அதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை.

    நீங்கள் ரூ.10 ஆயிரம் ஓட்டுக்கு கொடுத்தாலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெறும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது தான் எங்கள் லட்சியம். அதை இந்த மாத இறுதிக்குள் எட்டி விடுவோம்.

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மக்கள் இந்த ஆட்சியில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இந்த ஆட்சியை தமிழக மக்கள் விரும்பவில்லை. தமிழக மக்கள் விரும்பாத ஆட்சியை தூக்கி எறிந்து, தலைநிமிர்ந்த தமிழகத்தை உருவாக்க அடிமை ஆட்சியை ஒழிப்போம். கம்பீரமாக இருந்த அ.தி.மு.க. அடிமை தி.மு.க.வாகி விட்டது. அண்டை மாநில முதல்வர்கள் எல்லாம் தமிழக அரசை மத்திய அரசின் கீழ் உள்ள அடிமை அரசு என விமர்சிக்கும் நிலையை உருவாக்கிவிட்டனர்.

    விரைவில் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர உள்ளது. அப்போது நாங்கள் யார் என்பதை நிரூபிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்செல்வன், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, விவசாய பிரிவு செயலாளர் துரை.கோவிந்தராஜன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #TTVDhinakaran
    Next Story
    ×