search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழல் - மாணவர்களை பணியில் சேர்த்த நிறுவனங்கள் கலக்கம்
    X

    அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழல் - மாணவர்களை பணியில் சேர்த்த நிறுவனங்கள் கலக்கம்

    அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழல், மாணவர்களை பணியில் சேர்த்த பல நிறுவனங்கள் கவலையில் உள்ளன.

    சென்னை:

    அண்ணா பல்கலைக் கழகத்தில் 2015 முதல் 2018-ம் ஆண்டு வரை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த உமா, தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது, அதிக மார்க் வழங்கி முறைகேடு செய்ததாகவும், இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு பணிகள் தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திலும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    மார்க் சீட்டுகளை தயாரித்து கொடுப்பது, பல்கலைக்கழக பல்வேறு ஆவணங்களை தயாரித்து கொடுப்பது போன்றவற்றுக்காக தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.

    இதன்படி சென்னையை சேர்ந்த ‘மைஈசி டாக்ஸ்’ என்ற நிறுவனத்துடன் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக உமா இருந்த போது 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    அப்போது பல்கலைக்கழக துணைவேந்தராக ராஜாராம் இருந்து வந்தார். இந்த ஒப்பந்த பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

    எனவே, இது சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு இப்போதைய துணைவேந்தர் சூரப்பா தனி விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளார்.அந்த குழு ஒப்பந்தம் தொடர்பான பணிகளை ஆய்வு செய்து வருகிறது.

    ஒப்பந்தம் பல்கலைக்கழக விதிகளின்படி முறையாக செய்யப்பட்டதா? அதன் நடைமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டனவா? என விசாரணை குழு விசாரித்து வருகிறது.

    இது சம்பந்தமாக அந்த நிறுவனத்திடமும் விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கு நிறுவனம் அளித்த பதிலில் விசாரணை குழு திருப்தி அடையவில்லை.

    எனவே, தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இதிலும் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

    இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பட்டம் பெற்ற மாணவர்களை பணியில் சேர்த்துள்ள நிறுவனங்கள் கவலை அடைந்துள்ளன.

    அண்ணா பல்கலைக் கழகத்திலும், அதன் உறுப்பு கல்லூரிகளிலும் சேர்த்து ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறுகிறர்கள். அவர்களில் 58 சதவீதம் பேருக்கு வேலை கிடைக்கிறது.

    மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்யும் போது, அண்ணா பல்கலைக்கழக மார்க்கையும் முக்கியமாக எடுத்து கொள்கிறார்கள்.

    அதில் எடுத்துள்ள மார்க் அடிப்படையில்தான் மாணவர்களின் தகுதியை நிர்ணயிக்கின்றனர். குறிப்பாக மாணவர்களை தேர்வு செய்யும் போதே 60 சதவீதத்துக்கு மேல் மார்க் பெற்றவர்களைதான் பணி தேர்வுக்கு அழைக்கிறார்கள்.

    அதை விட குறைந்த மார்க் எடுத்து அல்லது தேர்ச்சி பெறாமலேயே முறைகேடு மூலமாக அதிக மார்க் எடுத்து பலர் பணி தேர்வுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    அப்படிப்பட்ட மாணவர்களை கொண்டு நிறுவனங்கள் செயல்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.

    எனவே, இதுபோன்ற மாணவர்கள் வேலையில் சேர்ந்திருப்பார்களோ என்று பல நிறுவனங்கள் கவலையில் உள்ளன.

    தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் 75 சதவீத ஊழியர்களை வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பான பணிகளுக்கு தான்பயன்படுத்துகின்றன.

    வெளிநாட்டு நிறுவனங்கள் மிகவும தரத்தை எதிர் பார்க்கும். அந்த தரம் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குதான் பாதிப்பு ஏற்படும் என்று தொழில்துறை நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    மேலும் ஒரு நிர்வாகி கூறும் போது, பணிக்கு தேர்வு செய்யும் போது, பல்வேறு கட்ட ஆய்வுகளை நாங்கள் மேற்கொள்கிறோம். தவறாக மார்க் எடுத்த ஒரு நபர் வேலைக்கு சேர்ந்தாலோ அவர் குறிப்பிட்ட காலத்துக்குள் திறமையை நிரூபித்து காட்ட வேண்டும். அப்போதுதான் அவர் வேலையில் தொடர முடி யும்.

    ஆனால், தவறான மாணவரை தேர்வு செய்து நாங்கள் பணத்தையும், நேரத்தையும் வீணடிக்கும் நிலையை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

    Next Story
    ×