search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சிக்கியவர்களை ஏற்றியபோது ஆம்புலன்ஸ் மீது கார் மோதல் - 2 பேர் பலி
    X

    விபத்தில் சிக்கியவர்களை ஏற்றியபோது ஆம்புலன்ஸ் மீது கார் மோதல் - 2 பேர் பலி

    விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய 2 பேர் கார் மோதி பலியான சம்பவம் மாமல்லபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #accidentcase

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லன் சிலை எதிரே இன்று காலை 4 மணி அளவில் திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திக், அஜித் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது பின்னால் தாறுமாறாக வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கார்த்திக்கும், அஜித்தும் பலத்த காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கன்னியப்பன், திருநாவுக்கரசு ஆகியோர் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றினர். அவர்களுக்கு உதவியாக பொது மக்களும் ஏராளமானோர் அங்கு திரண்டு நின்றனர்.

    அந்த நேரத்தில் சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி மின்னல் வேகத்தில் வந்த கார் திடீரென விபத்தில் சிக்கியவர்களை மீட்டுக் கொண்டிருந்த பொது மக்கள் கூட்டத்துக்குள் புகுந்து ஆம்புலன்ஸ் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய தூத்துக்குடியை சேர்ந்த ஹேமச்சந்திரா (வயது 30), சென்னை தி.நகரை சேர்ந்த ஏகாம்பரம் (50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    மேலும் கார்த்திக், அஜித், பிரேம்குமார் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 6 பேர் படுகாயத்துடன் உயிர் தப்பினர். அதிர்ஷ்டவசமாக போலீசார் காயமின்றி தப்பினர். காயம் அடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    முதலில் மோட்டார் சைக்கிள் மீது காரை மோதி விபத்து ஏற்படுத்திய தி.நகரை சேர்ந்த டிரைவர் ராகுலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் மது போதையில் காரை ஓட்டி வந்தது தெரிந்தது.

    இதேபோல் ஆம்புலன்ஸ் மீது மோதிய காரை பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் ஓட்டி வந்தது தெரியவந்தது. அவர்களுக்கு காரை ஓட்ட பெற்றோர் அனுமதி கொடுத்தது எப்படி? அதிகாலையில் எங்கிருந்து வந்தனர்? என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    விபத்து ஏற்படுத்திய 3 பேரையும் மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர். கைதான மாணவர்கள் ஒருவர் திருவான்மியூரை சேர்ந்தவர், மற்றொருவர் பாலவாக்கத்தை சேர்ந்தவர் ஆவார்.

    பலியான ஹேமச்சந்திரன் நுங்கம்பாக்கத்தில் உள்ள விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவர் இன்று காலை மாமல்லபுரம் வந்து இருக்கிறார்.

    அந்த நேரத்தில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய போது கார் மோதி பலியாகி விட்டார். இதேபோல் பலியான மற்றொருவரான ஏகாம்பரமும் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்ததாக தெரிகிறது.

    விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய 2 பேர் கார் மோதி பலியான சம்பவம் மாமல்லபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×