search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலக்கோடு அருகே லாரி டிரைவர் மனைவி மர்ம மரணம்
    X

    பாலக்கோடு அருகே லாரி டிரைவர் மனைவி மர்ம மரணம்

    பாலக்கோடு அருகே லாரி டிரைவர் மனைவி தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த மகேந்திரமங்கலம் அருகே உள்ள மாரவாடி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 25), லாரி டிரைவர். இவரது மனைவி ரவீணா (21).

    இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.

    பட்டதாரி பெண்ணான ரவீணாவுக்கு குழந்தை இல்லை என்பதை அவரது கணவரின் குடும்பத்தினர் அடிக்கடி சுட்டிக்காட்டி அவரை திட்டி வந்து உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்தியராஜ் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இடையே சொத்தில் பாகப்பிரிவினை நடந்து உள்ளது. இதனால் சத்தியராஜ் தனது மனைவி ரவீணாவுடன் தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தார். அவர் லாரி டிரைவர் வேலைக்கு சென்றுவிட்டார்.

    வழக்கமாக அவர் மனைவியுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவார். நேற்று மதியம் மனைவியை போனில் தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. இதனால் வீட்டுக்கு அருகில் இருந்த உறவினர்களுக்கு அவர் தகவல் சொல்லி இருக்கிறார். அவர்கள் போய் பார்த்தபோது ரவீணா வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தனர். அங்கு ரவீணா மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் சென்று ரவீணாவின் பிணத்தை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரவீணா சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் பிணமாக தொங்கவிடப்பட்டதாகவும் ரவீணாவின் தாயார் வள்ளி புகார் தெரிவித்தார். மேலும் வள்ளி, அவரது கணவர் சின்னமணிகண்டன் மற்றும் உறவினர்கள் போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

    பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு அதுபற்றி முடிவு செய்து கொள்ளலாம் என்று போலீசார் ரவீணாவின் உறவினர்களிடம் தெரிவித்தனர்.

    பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தெரியவரும்.

    மேலும் திருமணமான 4 வருடத்திற்குள் ரவீணா இறந்துபோனதால் அவரது சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்று தருமபுரி உதவி கலெக்டர் சிவனருள் விசாரணை நடத்த உள்ளார். அவர் இன்று ரவீணா மற்றும் லாரி டிரைவர் சத்தியராஜ் ஆகியோரின் உறவினர்களிடம் விசாரணை நடத்த உள்ளார்.

    ரவீணா இறந்தது தொடர்பாக அவரது தாயார் வள்ளி கூறியதாவது:-

    எனது மகள் பிளஸ்-2 முடித்த பிறகு சத்தியராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு கிருஷ்ணகிரிக்கு சென்று தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து முடித்தார். தற்போது பி.எட். படிக்க விண்ணப்பித்து இருந்தார்.

    ரவீணாவின் கணவர் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டுவார். நாங்களும் பணம் கொடுப்போம். கடந்த வாரம் எனது மகளுக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கி கொடுத்தோம். மகளுக்கு குழந்தை இல்லாததை சுட்டிக்காட்டி அவரும், அவரது உறவினர்களும் எனது மகளை திட்டி வந்தனர்.

    எனது மகள் சாவில் மர்மம் உள்ளது. அவரது நெஞ்சு மற்றும் தொடை பகுதியில் காயம் உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டு இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம்.

    இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டும். இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சம்பவம் குறித்து ரவீணாவின் தாய் மாமன் கூறியதாவது:-

    ரவீணா தற்கொலை செய்தது போல காட்ட நாடகமாடுகிறார்கள். வீட்டின் உள்புறம் உள்ள தாழ்ப்பாள் அறுத்து எடுக்கப்பட்டு உள்ளது. ரவீணாவின் சாவில் சந்தேகம் உள்ளது. அவர் கொலை தான் செய்யப்பட்டு இருக்கிறார். ரவீணாவின் கணவர் ரவீணா சாவதற்கு முந்தைய நாள் இரவு லாரி ஓட்ட செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் லாரிக்கு செல்லவில்லை.

    மேலும் நேற்று காலையே ரவீணா இறந்து இருக்கிறார். ஆனால் பிற்பகலில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக எங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×