search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
    X

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

    விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்ட பிரதான வாய்க்காலுக்கான பட்டனை அமுத்தி அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் இன்று தண்ணீர் திறந்து வைத்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. இதன் மொத்த நீர்மட்ட உயரம் 120 அடியாகவும் அதன் மொத்த நீர் இருப்பு 32.80 டிஎம்சி ஆக உள்ளது.

    இன்று (புதன்கிழமை) காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 3568 கனஅடியாகவும் அணையின் நீர்மட்ட உயரம் 97.70 அடியாகவும் அணையில் இருந்து நீர்திறப்பு 1500 கனஅடியாகவும் நீர் இருப்பு 26.96 டிஎம்சியாகவும் உள்ளது. அணை நிரம்புவதற்கு 8 அடி நீர்மட்டம் மட்டுமே போதுமானதாக உள்ளது.

    பவானிசாகர் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்கு கீழ்பவானி திட்ட பிரதான வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்ட பிரதான வாய்க்காலுக்கு இன்று காலை தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதற்கான விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், மாவட்ட கலெக்டர் பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டு அணையின் கால்வாய் மதகு பட்டனை அழுத்தி கீழ்பவானி திட்ட கால்வாய்க்கு தண்ணீரை திறந்துவிட்டனர்.

    அப்போது கால்வாய் மதகில் சீறிப்பாய்ந்து வந்த வெண்நிற நுரையுடன் கூடிய தண்ணீரில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர்களை தூவி வரவேற்றனர். அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் முற்கட்டமாக 500 கனஅடியும் அதனைத் தொடர்ந்து படிப்படியாக 1000, 1500 2000 என உயர்ந்து அதிகபட்சமாக விநாடிக்கு 2300 கனஅடியாக திறந்து விடப்படும்.

    ஈரோடு, கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த தண்ணீர் திறப்பால் நெல் சாகுபடியும் காய்ந்து போன் தென்னை, வாழை காப்பாற்றப்படும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    ஏற்கனவே ஜூலை 12ம் தேதி முதல் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசனத்துக்கு ஆற்று மதகு மூலம் தினந்தோறும் விநாடிக்கு 1500 கனஅடிநீர் திறந்து விடுப்படுவதால் 40 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்றுள்ளன.

    ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி மட்டுமே தண்ணீர் திறப்பு நடைபெறும். இந்தாண்டு அணையின் நீர்மட்டம் 112 அடியை எட்டியுள்ள நிலையில் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் முன்கூட்டியே அணையில் இருந்து கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 12-ந் தேதி முதல் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசனத்துக்கு தினந்தோறும் ஆற்று மதகு மூலம் விநாடிக்கு 1500 கனஅடிநீர் திறந்து விடப்படுகிறது.

    கீழ்பவானி வாய்க்காலுக்கு விநாடிக்கு 2300 கனஅடிநீரும் தடப்பள்ளி, அரக்கன் கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்காலுக்கு 1500 கனஅடிநீரும் என மொத்தம் விநாடிக்கு 3800 கனஅடிநீர் அணையில் இருந்து வெளியேற்றப்படும்.

    2006-ம் ஆண்டு பிறகு பவானிசாகர் அணை தற்போது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் தருவாயில் உள்ளது. அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆற்று மதகு மூலம் 8 மெகாவாட் மற்றும் கால்வாய் மூலம் 8 மெகாவாட் என மொத்தம் 16 மெகாவாட் மின் உற்பத்தியும் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, ராஜா கிருஷ்ணன், சிவசுப்பிரமணி, தனியரசு, சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×