search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டக்கல்லூரி ஆசிரியர் பணி: தமிழில் படித்தோருக்கு இடஒதுக்கீடு மறுப்பதா?- ராமதாஸ் அறிக்கை
    X

    சட்டக்கல்லூரி ஆசிரியர் பணி: தமிழில் படித்தோருக்கு இடஒதுக்கீடு மறுப்பதா?- ராமதாஸ் அறிக்கை

    சட்டக்கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில், தமிழில் படித்தோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு சட்டக் கல்லூரிகளில் 186 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்தேர்வில், தமிழில் படித்தவர்களுக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படாது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி தமிழில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீட்டை மறுப்பது கண்டிக்கத்தக்கது.

    இதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ள காரணம் அபத்தமானது; ஏற்க முடியாதது. உதவி சட்டப் பேராசிரியர் பணிக்கு குறைந்தபட்சக் கல்வித்தகுதி சட்ட மேற்படிப்பு ஆகும்.

    ‘‘தமிழகத்தில் முதுநிலை சட்டப்படிப்பு தமிழ் மொழியில் இல்லை என்பதால், எவருமே தமிழ் மொழியில் படித்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இந்த பணிக்கு தமிழில் படித்தோருக்கான இடஒதுக்கீடு வழங்குவது என்ற பேச்சுக்கே இட மில்லை’’ என்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்குவது குறித்த 2010 ஆம் ஆண்டின் 145-ஆம் எண் கொண்ட அரசாணையில், அரசுப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை தமிழில் படித்தவர்கள் முன்னுரிமை அடிப்படையிலான 20 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    இந்த அரசாணையை நேரடியாகப் பார்க்கும்போது, ஆசிரியர் தேர்வு வாரியம் கூறுவது சரி தானே? என்ற எண்ணம் ஏற்படும். ஆனால், தமிழில் படிப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தான் இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால், பட்டப்படிப்பு வரை தமிழில் படித்தோருக்கு உதவிப் பேராசிரியர் பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

    அவ்வாறு செய்வதற்கு பதிலாக தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீட்டையே ரத்து செய்யும் முடிவுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் எப்படி வந்தது? அதற்கான அதிகாரத்தை அந்த அமைப்புக்கு யார் கொடுத்தது? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் விடையளிக்க வேண்டும்.

    உதவி சட்டப் பேராசிரியர் பணி நியமனத்தில், பட்டப் படிப்பு வரை தமிழில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தால் தமிழில் படித்த 38 மாணவர்களுக்கு வேலை கிடைத்திருக்கக்கூடும். அவ்வாறு செய்யாததன் மூலம் தமிழுக்கு இந்த அரசு பெருந்துரோகம் செய்திருக்கிறது.

    அதற்கு பரிகாரம் தேடும் வகையில், உதவிப் பேராசிரியர் நியமனங்களில் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்திருந்தாலே தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டை அனுபவிக்கலாம் என அரசாணையை திருத்த வேண்டும். அதனடிப்படையில் உதவி சட்டப் பேராசிரியர் பணி நியமனத்தில் தமிழில் படித்தோருக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி புதிய அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×