search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி ஆற்றில் 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு - பள்ளிபாளையத்தில் 1000 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
    X

    காவிரி ஆற்றில் 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு - பள்ளிபாளையத்தில் 1000 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் இன்று காலை 1000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. #MetturDam #CauveryRiver
    ஈரோடு:

    மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி (120 அடி) உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

    நேற்று 40 ஆயிரம் கன அடியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் இரவு 75 ஆயிரம் கன அடியாக திறந்துவிடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு பாய்ந்து ஓடுகிறது.

    சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தை பார்த்து மக்கள் மனதிலும் உற்சாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.

    மேட்டூர் அணையிலும் திறந்து விடப்படும் தண்ணீர் சேலம் மாவட்ட எல்லை வழியாக ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிபேட்டை, அம்மாபேட்டை, பவானி, பள்ளிபாளையம், ஈரோடு வழியாக பாய்ந்து செல்கிறது.

    ஈரோடு மாவட்ட எல்லையான பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை அதிகாரிகள் ஏற்கனவே பத்திரமான இடத்துக்கு செல்லும்படியும், தங்குவதற்கு மண்டபம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவுறுத்தினர்.

    இதையொட்டி பள்ளிபாளையம் காவிரி கரையோரம் உள்ள தங்கபட்டபள்ளம், பாவடி தெரு, புதன் சந்தை பேட்டை, பெரியார்நகர், ஜனதா நகர் பகுதிகளை சேர்ந்த 500 குடும்பத்தினர் வீடுகளை காலி செய்துவிட்டு மண்டபத்துக்கு பெட்டியும் படுக்கையுமாக சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மேட்டூர் அணையில் இருந்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் இன்று அதிகாலை காவிரி ஆற்றில் மேலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த மேலும் 500 வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் இன்று தங்கள் வீடுகளைவிட்டு பாதுகாப்பாக வெளியேறினர். அவர்கள் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் இன்று காலை சுமார் 100 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. 1000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பள்ளிபாளையம் மற்றும் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிகளில் தண்டோரா போட்டு தொடர்ந்து மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை வரை வெள்ள பாதிப்பு இல்லை. காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பாய்ந்து செல்வதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் அறிவித்துள்ளார். கலெக்டரின் உத்தரவுபடி பொதுப்பணி துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரப் பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் குடிசைகள் அமைத்து சலவை தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் கலெக்டர் வேண்டுகோள்படி குடிசைகளை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர்.

    இவர்கள் தங்கி உள்ள குடிசைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதில் பல குடிசைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டன. #MetturDam #CauveryRiver
    Next Story
    ×